காரைக்கால் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் உள்பட பல்வேறு ரெயில்கள் தாமதம்

இரட்டை ரெயில் பாதையில் என்ஜினீயரிங் பணி காரணமாக காரைக்கால்-எர்ணா குளம் எக்ஸ்பிரஸ் உள்பட பல்வேறு ரெயில்கள் தாமதமானது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Update: 2018-03-27 22:38 GMT
திருச்சி,

திருச்சி-தஞ்சை ரெயில்வே மார்க்கத்தில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது. இந்தநிலையில் தஞ்சை-சோளகம்பட்டி இடையே இரட்டை ரெயில் பாதையில் என்ஜினீயரிங் பணி காரணமாக திருச்சி-மன்னார்குடி பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து காரைக்காலில் இருந்து திருச்சி வழியாக எர்ணாகுளம் செல்லும் காரைக்கால்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் நேற்று இரவு 2 மணிநேரம் தாமதாக 10.15 மணிக்கு திருச்சி வந்தது. இதனால் அந்த ரெயிலுக்காக திருச்சி ரெயில் நிலையத்தில் காத்து இருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.

இதேபோல் மயிலாடுதுறையில் இருந்து மைசூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், திருச்சியில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரெயில் உள்பட தஞ்சை மார்க்கமாக சென்ற பல்வேறு ரெயில்களும் தாமதமாகின. இதனால் பயணிகள் நீண்டநேரமாக ரெயில் நிலைய நடைமேடையில் காத்து கிடந்தனர். இதனால் நேற்று இரவு திருச்சி ரெயில் நிலையத்தில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த என்ஜினீயரிங் பணி முடிவடைந்துவிடும் என்றும், அதன்பிறகு இந்த மார்க்கத்தில் ரெயில்கள் தாமதம் இருக்காது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் புதிய வழித்தடத்தில் முதன்முதலாக நேற்று மாலை தஞ்சை வழியாக திருச்சிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டன. திருச்சியில் இருந்து தஞ்சை சென்ற ரெயில்கள் பழைய வழித்தடத்திலும், தஞ்சையில் இருந்து திருச்சி வந்த ரெயில்கள் புதிய வழித்தடத்திலும் இயக்கப்பட்டன.

வழக்கமாக தஞ்சையில் இருந்து திருச்சி வருவதற்கு பயண நேரம் 1 மணி நேரம் ஆகும். தற்போது இருவழி ரெயில்பாதை பயன்பாட்டுக்கு வந்ததன் மூலம் பயண நேரம் 20 நிமிடம் குறைந்து 40 நிமிடத்தில் ரெயில்கள் சென்றன.

மேலும் செய்திகள்