65 சதவீத மாணவர்களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரியவில்லை - கலெக்டர் வேதனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 65 சதவீத மாணவர்களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரியவில்லை என கலெக்டர் வேதனை தெரிவித்தார்.
திருவண்ணாமலை,
65 சதவீத மாணவர்களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரியவில்லை என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற இளையோர் மாநாட்டில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வேதனையுடன் கூறினார்.
திருவண்ணாமலை நேரு யுவ கேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் மாநாடு திருவண்ணாமலை செட்டித் தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நேரு யுவ கேந்திராவின் திருவண்ணாமலை மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் விஜயாராவ் தலைமை தாங்கினார். ஆலோசனை குழு உறுப்பினர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார்.
நேரு யுவகேந்திரா கணக்காளர் அப்துல்காதர் வரவேற்றார். திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருவிச்செல்வி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இளைஞர் சமுதாயத்தின் கையில் தான் நாட்டின் வளர்ச்சி உள்ளது. இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்திய நாடு. திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 சதவீத பேர் இளைஞர்கள் தான். காலத்திற்கு ஏற்ப இளைஞர்கள் புதிய கலாசாரத்தையும், புதிய சமுதாயத்தையும் உருவாக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமப் புறங்களில் உள்ள பெரும்பாலான பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. படித்த இளைஞர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 65 சதவீத மாணவ, மாணவிகளுக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியவில்லை. 50 சதவீதம் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதவும், படிக்கவும் தெரியவில்லை. இளைஞர்கள் அவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் பிழையின்றி எழுத, படிக்க கற்று கொடுக்க முன்வர வேண்டும் என அவர் பேசினார்.
இதையடுத்து அவர், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் சிறப்பாக செயலாற்றி ஒன்றிய அளவில் சிறந்து விளங்கிய இளையோர் மன்றத்திற்கு முதல் பரிசாக ரூ.8 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழும், 2-ம் பரிசாக ரூ.4 ஆயிரம் ரொக்க பரிசும் மற்றும் சான்றிதழும், நேரு யுவ கேந்திரா மூலம் தொழிற் பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கினார்.