திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் ஏலம் எடுக்க வந்தவர்கள் வாக்குவாதம்-போலீஸ் குவிப்பு

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் ஏலம் எடுக்க வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Update: 2018-03-27 23:15 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட சைக்கிள் நிறுத்தம் போன்றவைக்கு ஏலம் எடுக்க வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் நேற்று மத்திய பஸ் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யும் உரிமை, பஸ் நிலையத்தின் தென்புறம் அமைக்கப்பட்டு உள்ள மிதி வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் நிலையத்துக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை, நகராட்சி எல்லைக்குள் வரும் சுற்றுலா மோட்டார் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை (கார்த்திகை தீப விழா நாட்கள் நீங்கலாக), சாலையோர தற்காலிக கடைகளில் கட்டணம் வசூலித்துக் கொள்ளும் உரிமை (கார்த்திகை தீப விழா நாட்கள் நீங்கலாக), முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள தங்கும் விடுதி மற்றும் நகர் நல அலுவலர் குடியிருப்பு சுற்று சுவர் ஒட்டியுள்ள இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் கட்டணம் வசூல் செய்தல் ஆகிய இனங்களுக்கான ஏலம் விடப்பட்டது. ஏற்கனவே 23-ந் தேதி நடத்தப்பட இருந்த ஏலம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று ஏலம் நடைபெற்றது.

ஏலம் எடுப்பதற்காக பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். இதில் ஏலம் எடுக்க வந்தவர்களை விட அவர்களுக்கு ஆதரவாக வந்தவர்களின் கூட்டமே அதிகமாக காணப்பட்டது. ஏலம் எடுக்க வந்தவர்கள் பல்வேறு பிரிவுகளாக இருந்ததால் ஒருவரை ஒருவர் ஏலத்திற்கு ஒப்பந்தப்புள்ளி அளிக்க செல்ல விடாமல் தடுத்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

இதனால் நகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஏலம் எடுக்க வந்தவர்களின் வாக்குவாதத்தை செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்தனர். அப்போது அங்கிருந்த ஒருவர் செய்தியாளர்களை தகாத வார்த்தைகளால் பேசினார். ஆத்திரம் அடைந்த செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து ஏலம் எடுக்க வந்தவர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் செய்தியாளர்களிடம் சமரசம் செய்தனர்.

இதையடுத்து நகராட்சி ஆணையர் பாரிஜாதம் தலைமையில் ஏலம் விடப்பட்டது. இதில் மத்திய பஸ் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யும் உரிமை ரூ.10 ஆயிரத்து 500-க்கும், பஸ் நிலையத்தின் தென்புறம் அமைக்கப்பட்டு உள்ள மிதி வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் நிலையம் கட்டணம் வசூலிக்கும் உரிமை ரூ.15 லட்சத்து 32 ஆயிரத்திற்கும், நகராட்சி எல்லைக்குள் வரும் சுற்றுலா மோட்டார் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கம் உரிமை ரூ.36 லட்சத்துக்கும், சாலையோர தற்காலிக கடைகளில் கட்டணம் வசூலித்துக் கொள்ளும் உரிமை ரூ.15 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.

முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள தங்கும் விடுதி மற்றும் நகர் நல அலுவலர் குடியிருப்பு சுற்று சுவர் ஒட்டியுள்ள இருச்சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் கட்டணம் வசூல் செய்தலுக்கு ஒருவர் மட்டும் ஒப்பந்த புள்ளி அளித்திருந்தார். எனவே இதற்கான ஏலம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என்று நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்