தேவதானப்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை வழக்கில் மனைவி–கள்ளக்காதலன் கைது

தேவதானப்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-27 22:00 GMT
தேவதானப்பட்டி,

தேவதானப்பட்டி அருகே பாலப்பட்டியை சேர்ந்தவர் செபாஸ்டின் என்ற தமிழ்ச்செல்வம் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவருடைய சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாலப்பட்டிக்கு குடியேறினார். இவருடைய மனைவி வேலூரை சேர்ந்த மீனா (32). செபாஸ்டினுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். மீனாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார். அவர் கணவரை பிரிந்து இருந்துள்ளார். இந்த நிலையில் செபாஸ்டின், மீனாவை 2–வது திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 25–ந் தேதி இரவு வீட்டில் செபாஸ்டின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உடனே மீனா மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (26) ஆகியோர் சேர்ந்து செபாஸ்டின் உடலை போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் பாலப்பட்டி மயானத்தில் புதைத்ததாக கூறப்படுகிறது. அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக கொடைக்கானல் மன்னவனூரை சேர்ந்த செபாஸ்டினின் அண்ணன் சவரியப்பன் என்ற வனராஜ் தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பாலப்பட்டி மயானத்தில் பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார் முன்னிலையில் செபாஸ்டின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. மயானத்தில் அவருடைய உடலை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் கோகுல்சங்கர் தலைமையில் மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

இந்த நிலையில் போலீசார் விசாரணையில் மீனாவுக்கும், சுரேசுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் செபாஸ்டின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கத்தியால் கை மற்றும் தலையில் வெட்டிக் கொண்டதாக மீனாவும், சுரேசும் தெரிவித்ததாக போலீசார் கூறினார்.

இதையடுத்து செபாஸ்டினை தற்கொலைக்கு தூண்டியதாகவும், அவருடைய உடலை போலீசாருக்கு தெரியாமல் மயானத்தில் புதைத்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனா, சுரேசை கைது செய்தனர்.

கணவன் தற்கொலைக்கு காரணமான மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்