சங்கிலி பறிப்பு திருடர்கள் 2 பேர் கைது 25½ பவுன் தங்க நகைகள் பறிமுதல்

கரூரில் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 25½ பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.;

Update: 2018-03-27 22:45 GMT
கரூர்,

கரூர் வடக்கு காந்திகிராமத்தில் இ.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் லதா (வயது 35). இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது 2 பேர் முகத்தை துணியால் கட்டிக்கொண்டு முகவரி கேட்பது போல லதாவின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சாலியை பறித்துக்கொண்டு ஓடினர். இது குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் குளந்தானூர் டாஸ்மாக் பாரில் நேற்று 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து கொண்டு தப்பி செல்வதாக பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படி வந்த கரூர் நீலிமேடு பகுதியை சேர்ந்த மதன்குமார்(20), ராமகிருஷ்ணபுரத்தை சேர்நத விக்கி என்கிற விக்னேஷ்(21) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் 2 பேரும் பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல் பகுதிகளில் பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது.

இதையடுத்து மதன்குமார், விக்கி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 25½ பவுன் தங்க நகைகளையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


கைதான 2 பேரும் பாலிடெக்னிக் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் எனவும், அவ்வப்போது செலவுக்கு சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கைதான 2 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்