மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டம் கலெக்டர் தண்டபாணி தலைமையில் நடந்தது
கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டம் கலெக்டர் தண்டபாணி தலைமையில் நடைபெற்றது.
கடலூர்,
சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் தலைவர் மற்றும் வருவாய் ஆணையர் ஆகியோரின் ஆலோசனைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் குறை கேட்பு கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தண்டபாணி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்று அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
அதன் பின்னர் கூட்டத்தில் கலெக்டர் தண்டபாணி பேசியதாவது:-
பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் சேர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன உதவிகள் செய்யலாம் என்று 3 ஆண்டு செயல்திட்டம் வகுக்கப்படும். இதற்காக ஒரு குழு அமைத்து அந்த குழு வரவு-செலவு கணக்குகளை பராமரிக்கும், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கோரிக்கைகள் குறித்து பரிந்துரை செய்யப்படும் பட்சத்தில் அதை ஆய்வு செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் இதுவரை 52 ஆயிரத்து 379 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், 37 ஆயிரத்து 477 பேருக்கு நல வாரிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 61 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது என அவர் கூறினார்.
தொடர்ந்து வருவாய்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் 18 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பேருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான காசோலையையும் கலெக்டர் தண்டபாணி வழங்கினார்.
கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) கூஷ்ணாதேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனுவாசன், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) கோபாலகிருஷ்ணன், தாசில்தார்(சமூக பாதுகாப்பு திட்டம்) சிவா, நகர்நல அலுவலர் டாக்டர் எழில்மதனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.