குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாட்டாணிக்கோட்டை குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி பேராவூரணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-27 22:15 GMT
பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் உள்ள 70 ஏக்கர் நிலம் மன்னர்கள் ஆட்சி காலத்தில் சவுரிராஜன்-செண்பகத்தம்மாள் குடும்பத்தினருக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலத்தை விலைக்கு வாங்கியவர்கள் அங்கு வீடு கட்டி 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களிடம் வீட்டை காலிசெய்யும்படி நிலத்தை விற்றவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நாட்டாணிக்கோட்டை கிராம மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில் கிராம மக்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும், நிலத்தை வாங்கி வீடு கட்டி குடியிருப்பவர்களை காலி செய்ய வைக்கும் முயற்சியை கைவிடக்கோரியும், நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாசில்தார் உறுதி

ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் சித்திரவேலு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஸ்டாலின் பிரபு, சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் காசிநாதன், ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பேராவூரணி தாசில்தார் பாஸ்கரனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

மேலும் செய்திகள்