மாநகராட்சி ஆணையாளரை தாக்க முயற்சி தேசியவாத காங்கிரஸ் பிரமுகரை கைது செய்யக்கோரி சாலை மறியல்

தஞ்சை மாநகராட்சி ஆணையாளரை தாக்க முயன்ற தேசியவாத காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரை கைது செய்யக்கோரி அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-03-27 22:45 GMT
தஞ்சாவூர்,

நகராட்சிகளின் தஞ்சை மண்டல இயக்குனராக பணி புரிந்து வருபவர் காளிமுத்து. இவர் கூடுதல் பொறுப்பாக தஞ்சை மாநகராட்சி ஆணையாளராகவும் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவர், தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அவரை, தஞ்சை விளார் சாலையை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் கரிகால்சோழன் நேரில் சந்தித்து நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்போரின் முகவரியை வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட காளிமுத்து, முறையாக கோப்புகளை பார்த்து உரிய பதில் கடிதம் மூலம் அனுப்பப்படும் என்றார். ஆனால் 1 மணிநேரத்தில் பதில் தர வேண்டும் என்று மீண்டும் அவர் வற்புறுத்தினார்.

மேலும் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் ஒன்றை தனக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கரிகால் சோழன் வலியுறுத்தினார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை முற்றியதால் திடீரென ஆணையாளரை அவர் தரக்குறைவாக பேசியதுடன் தாக்கவும் முயற்சி செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆணையாளர் காளிமுத்து சத்தம் போடவே அலுவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். அலுவலர்களை பார்த்தவுடன் கரிகால்சோழன் அங்கிருந்து சென்று விட்டார். ஆணையாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் தாக்க முயற்சி செய்த அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாநகராட்சி அலுவலர்கள் பணி செய்யாமல் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தஞ்சை மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் கூட்டமைப்பு தலைவர் கண்ண தாசன் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கரவடிவேலு, வருவாய் உதவியாளர் சங்க தலைவர் வெங்கடாசலம், நிர்வாகி நெடுமாறன், கண்காணிப்பாளர் கிளமெண்ட், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் குப்பைகள் அள்ளும் லாரிகளை ரோட்டின் குறுக்கே நிறுத்தி வைத்தனர். மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலையை அப்படியே நிறுத்தி விட்டு சாலை மறியலில் வந்து பங்கேற்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த போராட்டம் குறித்த தகவல் அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், கரிகால்சோழனை கைது செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

அதற்கு போலீசார், உரிய முறையில் புகார் மனு அளித்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் மாநகராட்சி அலுவலகம் முன்பு சாமியானா பந்தல் அமைத்து தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் தன்னை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி, அநாகரிகமாக திட்டியதுடன் அரசு பணி செய்யவிடாமல் தடுத்த கரிகால்சோழன் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மேற்கு போலீஸ் நிலையத்தில் காளிமுத்து புகார் செய்தார்.

அதன்பேரில் தகாத வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கரிகால்சோழன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகலை போராட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்களிடம் போலீசார் வழங்கினர்.

இதையடுத்து மாலை 5 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்