திருச்செந்தூரில் கோவில் அர்ச்சகர் மர்ம சாவு

திருச்செந்தூரில் கோவில் அர்ச்சகர் மர்மமான முறையில், குளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2018-03-28 02:00 IST
திருச்செந்தூர்,

திருச்செந்தூரில் கோவில் அர்ச்சகர் மர்மமான முறையில், குளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் அர்ச்சகர்

திருச்செந்தூர் மைலப்பபுரம் தெருவை சேர்ந்தவர் ராஜ் (வயது 41). கோவில் அர்ச்சகர். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே லட்சுமி தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து, தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்கு மகனுடன் சென்று விட்டார்.

இதை தொடர்ந்து அவர், ராமநாதபுரம் சென்றார். அங்கு தங்கியிருந்து சில கோவில்களில் அர்ச்சகராக இருந்து வந்தார். இவர், கடந்த 25-ந்தேதி திருச்செந்தூரில் உள்ள சொந்த வீட்டுக்கு வந்தார். அன்று பகலில் அவர், குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் இருந்த பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர், அவர் வீட்டுக்கு திரும்பி வராமல் மாயமானார். அவரை பெற்றோர் தேடி வந்தனர்.

மர்ம சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திருச்செந்தூர் ஆவுடையார்குளத்தில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ராஜின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குளத்தில் குளித்தபோது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் மர்மமான முறையில் இறந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்