நாமக்கல்லில் காசநோய் விழிப்புணர்வு இருசக்கர வாகன ஊர்வலம் மனிதசங்கிலியும் நடந்தது

நாமக்கல்லில் நேற்று உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன ஊர்வலம் மற்றும் மனிதசங்கிலி நடந்தது.

Update: 2018-03-27 22:45 GMT
நாமக்கல்,

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு மனிதசங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி, மனிதசங்கிலியை தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பலூன் ஏந்தியும் நின்றனர்.

பின்னர் அனைவரும் காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து காசநோய் குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கி மோகனூர் சாலை, மணிக்கூண்டு, போலீஸ் நிலையம், டாக்டர் சங்கரன் சாலை வழியாக மீண்டும் அரசு ஆஸ்பத்திரியை அடைந்தது.

விழிப்புணர்வு கூட்டம்

பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் காசநோய் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் சரஸ்வதி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் செல்வக்குமார், டாக்டர் ராஜ்மோகன், உள்ளுரை மருத்துவ அலுவலர் கண்ணப்பன், காசநோய்த்துறை துணை இயக்குனர் கணபதி, எர்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்