கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் பயிற்றுனர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் பயிற்றுனர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-03-27 22:30 GMT
கோவை,

கோவை டவுன் ஹாலில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலகம் முன்பு நேற்று ஆசிரியர் பயிற்றுனர்கள் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கலைசெல்வன் தலைமை தாங்கினார். பொருளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தை செயலாளர் வேல்குமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-

கடந்த 2006 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு முறையே 2016 மற்றும் 17-ம் ஆண்டுகளில் தேர்வு நிலை ஆணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஆணை வழங்கப்பட வில்லை. இதன்காரணமாக அப்போது பணியில் சேர்ந்தவர்கள் பணப்பலன்களை பெறுவதிலும், பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெற்று பள்ளிகளில் பணிபுரிந்து வருகிறவர்கள் தங்கள் பணி பதிவேடுகளை பெறுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அவர்களுக்கு தேர்வு நிலை ஆணை வழங்க வேண்டும்.

ஆசிரியை பயிற்றுனர்கள் கர்ப்ப காலத்தில் விடுமுறை கேட்டு உரிய மருத்துவ சான்றிதழுடன் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். இதன்காரணமாக அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. மேலும் ஒரு சில ஆசிரியைகளுக்கு கருச்சிதைவும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். டாக்டரின் ஆலோசனைப்படி மருத்துவ விடுப்பு கோரும் ஆசிரியைகளுக்கு உடனடியாக மருத்துவ விடுமுறை வழங்க வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு பிறகு பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்ற உத்தரவை பின்பற்றாமல் ஆய்வு கூட்டங்களை அதிகாரிகள் மாலை 5 மணிக்கு மேல் ஆரம்பித்து இரவு 7 மணி வரை நடத்துகின்றனர். இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.

கோவையில் உள்ள மாவட்ட திட்ட அலுவலகத்தில் உள்ள கழிப்பறை போதிய பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் இதனை பயன்படுத்தும் நபர்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதனை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய வேண்டும். அதுவரை இந்த போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த போராட்டத்தில் மாவட்ட மகளிர் அணியை சேர்ந்த ரேணுகா, மேகலா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இவர்களின் போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்