கலைமகள் சபா நில மோசடி வழக்கில் 8 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கோர்ட்டு தீர்ப்பு

கலைமகள் சபா நிறுவன நில மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தை சேர்ந்த 8 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.;

Update: 2018-03-27 22:15 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 1984-ம் ஆண்டு கலைமகள் சபா என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் பொதுமக்களிடம் நிலம் தருவதாக கூறி பணம் வசூல் செய்து பல இடங்களில் முதலீடு செய்தனர். மேலும் பரிசுப் பொருட்கள் மற்றும் கல்வி, திருமணம் ஆகியவற்றிற்கு நிதி உதவி அளிப்பதாக பல கவர்ச்சித் திட்டங்களை அறிவித்தனர்.

கடலூர், விழுப்புரம், கோவை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியிலும் அந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு வந்தன. ஆனால் அந்த நிறுவனத்தினர் உறுதி அளித்தபடி பொதுமக்களுக்கு எதுவும் தராமல், சில நாட்களிலேயே தலைமறைவாகினர்.

3 ஆண்டுகள் சிறை

இதுகுறித்து பல்வேறு மாவட்டங்களில் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்தது. பின்னர் அனைத்து வழக்குகளும் நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் கடந்த 1998-ம் ஆண்டு நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி கருணாநிதி முன்னிலையில் நடந்து வந்தது. நேற்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட, கலைமகள் சபா செயல்பாட்டாளர்கள் சுப்பிரமணியம், இளங்கோவன், குமார், ஜோகியம் இருதயராஜ், பாலசண்முகம், கருணாநிதி, கணேசன், ராமலிங்கம் ஆகிய 8 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கருணாநிதி தீர்ப்பு அளித்தார். மேலும் குமார் மற்றும் ஜோகியம் இருதயராஜ் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரமும், மற்றவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்