அ.குமரெட்டியாபுரத்தில் போராடும் கிராம மக்கள் மீது பொய் வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது ஜி.கே.மணி பேச்சு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ.குமரெட்டியாபுரத்தில் போராடும் கிராமமக்கள் மீது பொய் வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது என்று ஜி.கே.மணி கூறினார்.

Update: 2018-03-27 21:00 GMT
தூத்துக்குடி,

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ.குமரெட்டியாபுரத்தில் போராடும் கிராமமக்கள் மீது பொய் வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது என்று ஜி.கே.மணி கூறினார்.

போராட்டத்துக்கு ஆதரவு


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 44-வது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர். இந்த கிராம மக்களை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நேற்று காலை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கிராம மக்களுக்கு பா.ம.க. எப்போதும் துணை நிற்கும் என்றார்.

அவரிடம் அந்த பகுதி மக்கள் கூறுகையில், அ.குமரெட்டியாபுரம் கிராமத்துக்கும், ஸ்டெர்லைட் விரிவாக்கம் நடக்கும் இடத்துக்கும் இடையே சுமார் 100 மீட்டர் இடைவெளிதான் உள்ளது. இதனால் எங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் நச்சுவாயு காரணமாக மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எங்கள் போராட்டத்தில் அரசியல் கட்சியினரை அனுமதிக்கவில்லை. ஏனென்றால் கடந்த காலங்களில் எங்களை ஸ்டெர்லைட் தொழிற்சாலை வாசல் வரை அழைத்து சென்று விட்டு அவர்கள் பின்வாசல் வழியாக சென்று விட்டனர். இதனால் மக்களாகவே போராடி வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள தண்ணீர் மிகவும் மாசுபட்டு குடிக்க முடியாத அளவுக்கு உள்ளது என்று கூறினர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள தண்ணீரில் சமைத்த சோறு மஞ்சள் நிறமாக இருப்பதையும், நல்ல தண்ணீரில் சமைத்த சோறு வெள்ளையாக இருப்பதையும் ஜி.கே.மணியிடம் கிராம மக்கள் காண்பித்தனர்.

கண்டிக்கத்தக்கது

பின்னர் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பேசியதாவது:- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பகுதி மக்கள் போராடி வருகிறீர்கள். இது நியாயமான போராட்டம். இந்த போராட்டத்தை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை விடுத்து உள்ளார். 1996-97-ம் ஆண்டு பா.ம.க. சார்பில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெறும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்காமல், பொய் வழக்கு போடுவது, பந்தல் போடக்கூடாது, போராட்டம் நடத்தக்கூடாது என்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு மக்கள் நலன் காக்கும் அரசாக இருந்தால், மக்களை அழைத்து பேசி இருக்க வேண்டும். மக்களின் கருத்துக்களை கேட்டு இருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு போராட்டத்தை அடக்க நினைக்க கூடாது. அப்படி நினைத்தால் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும்.

மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை


தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் இந்த போராட்டம் குறித்து மாவட்ட நிர்வாகம் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்கிறார். அந்த எம்.எல்.ஏ என்ன செய்கிறார். அவர் இந்த போராட்டம் குறித்து அரசுக்கு கொண்டு செல்ல வேண்டியதுதானே. அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பா.ம.க. தொழில் வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. ஆனால் மக்களை அழிக்கும், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலை வேண்டாம். இந்த போராட்டத்தின் தன்மையை பார்த்து அடுத்தகட்டமாக போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அ.குமரெட்டியாபுரம் பகுதியில் உள்ள அடிபம்பில் தண்ணீரை எடுத்து குடித்து பார்த்தார். அந்த தண்ணீர் கலங்கிய நிலையில் இருந்தது. பிறகு ஊரின் அருகே ஸ்டெர்லைட் விரிவாக்கம் செய்யப்படும் பகுதியை பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்