ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து “முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.;

Update: 2018-03-27 21:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்துக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்பது தவறான கருத்து. இந்த ஆலை புதிதாக நிறுவப்படவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தற்போது விரிவாக்கம் செய்யும் போது, எங்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்று அ.குமரெட்டியாபுரம் மக்கள் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருவதை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

மாவட்ட நிர்வாகம் மூலம் விரைவில் ஆலை நிர்வாகத்திடம் அறிக்கை பெற்று, முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, மக்களுக்கு எந்த திட்டத்தால் பாதிப்பு வந்தாலும், முதல் எதிர்ப்பு குரல் கொடுப்பது அ.தி.மு.க.தான். இதுபோன்ற திட்டங்களை ஊக்குவிக்கும் பணிகளை அ.தி.மு.க. ஒருபோதும் செய்யாது. மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அதற்கு உண்டான தீர்வை அரசு நிச்சயமாக செய்யும்.

கருத்து கேட்க...

அதேபோன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு என்று கருத்து கேட்க மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தி உள்ளேன். இதனால் அ.குமரெட்டியாபுரம் மக்களுடன் விரைவில் கலந்தாய்வு கூட்டம் நடத்த போவதாக கலெக்டர் கூறி உள்ளார். கருத்து கேட்டு, அதனை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டு செல்வோம். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் அரசை சிறப்பாக நடத்தி, ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மரக்கன்று நடும் விழாவை ஒரு இயக்கமாகவே அரசும், அ.திமு.க.வும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 70 லட்சம் மரக்கன்று நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 27 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

ஓராண்டு சாதனையை அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை செய்தித்துறை செய்து வருகிறது. ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி வருகிறது. மக்கள் நலப்பணிகள் சிறப்பாக நடந்து வருவதை அனைவரும் அறிவார்கள்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

மேலும் செய்திகள்