இரும்பு கடைக்காரரை கடத்திய கூலிப்படையினர் 3 பேர் கைது

கொடுங்கையூரில் நிலத்தகராறில் இரும்பு கடைக்காரரை கடத்திய கூலிப்படையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-03-27 23:00 GMT
பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் ஆர்.வி. நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் தேவபிரகாசம் (வயது 44). கொடுங்கையூர் காமராஜர் சாலையில் பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார். இவர் கடை நடத்தி வரும் இடம், ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த கெங்கல்ராஜ் என்பவருக்கு சொந்தமானதாகும்.

இங்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தேவபிரகாசம் இரும்புக்கடை நடத்தி வருகிறார். இந்த இடத்தை விலைக்கு வாங்குவதற்காக ரூ.80 லட்சத்திற்கு உரிமையாளர் கெங்கல்ராஜிடம் பேசி கடந்த 2013-ம் ஆண்டு தேவபிரகாசம் அட்வான்சாக ரூ.30 லட்சம் கொடுத்தார். பத்திரப்பதிவு செய்யும்போது மீதி பணம் கொடுப்பதாக பேசி உள்ளனர்.

ஆனால் இந்த இடத்திற்கு கெங்கல்ராஜால் பட்டா வாங்க முடியவில்லை. எனவே அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து விடுவதாகவும், கடையை காலி செய்யுமாறும் தேவபிரகாசிடம் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த தேவபிரகாசம், கூடுதலாக பணம் கேட்டதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த கெங்கல்ராஜ், கூலிப்படையை ஏவி தேவபிரகாசை கத்திமுனையில் காரில் கடத்தினார். இதுகுறித்து தேவபிரகாசத்தின் மனைவி உமா, கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தனிப்படை போலீசார் தேவபிரகாசத்தை தேடி வந்தனர்.

இந்தநிலையில் பூந்தமல்லி அருகே தேவபிரகாசை காரில் இருந்து இறக்கிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி சென்று விட்டனர்.

இதற்கிடையே போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் தேவபிரகாசத்தை கடத்தியதாக கூலிப்படையை சேர்ந்த பெரம்பூர் திரு.வி.க. நகரை சேர்ந்த அஜித் (21), மணி கண்டன் (22), ராஜேஷ் (21) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இடத்தின் உரிமையாளர் கெங்கல்ராஜ் தங்களுக்கு பணம் கொடுத்து தேவபிரகாசத்தை கடத்த சொன்னதாக தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் தலைமறைவான கெங்கல்ராஜ் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்