தெருநாய்கள் கடித்து குதறியதில் 5 வயது சிறுவன் பரிதாப சாவு

தெருநாய்கள் கடித்து குதறியதில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2018-03-27 01:08 GMT
புனே,

புனே ஹிஞ்சேவாடி அருகில் உள்ள மான் கிராமத்தை சேர்ந்தவர் புட்டோ. இவரது மகன் சகில் அன்சாரி (வயது5). நேற்றுமுன்தினம் சிறுவன் சகில் அன்சாரி வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்தான். திடீரென அவன் அலறினான். அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அவனது சத்தம் கேட்டு ஓடி வந்தார்.

அப்போது 5 தெருநாய்கள் சிறுவன் சகில் அன்சாரியை கடித்து குதறி கொண்டிருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அந்த நாய்களை விரட்டினார்.

இதற்கிடைய தகவல் அறிந்து ஓடி வந்த அவனது தாய் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் சிறுவன் மேல்சிகிச்சைக்காக பிம்பிரியில் உள்ள யஸ்வந்த்ராவ் சவான் நினைவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்து வந்த போலீசார் அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்