சேலம் கலெக்டர் முன்பு பிளேடால் கையை கீறிக்கொண்ட வாலிபர்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சேலம் கலெக்டர் முன்பு பிளேடால் கையை கீறிக்கொண்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-03-26 21:58 GMT
சேலம்,

சேலம் முள்ளுவாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தார். வரிசையில் நின்று கொண்டு வந்த பார்த்திபன், கலெக்டர் ரோகிணியிடம் நாளிதழ் ஒன்றை கொடுத்து, கடந்த 4 மாதங்களாக மாநகராட்சி பகுதியில் 47-வது வார்டுக்கு உட்பட்ட குகை பெரியார் வளைவு அருகில் முள்ளுவாடி அம்பேத்கர் தெருவில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததால் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதை சீரமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.

அதற்குள், சேலம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அவரை மனு கொடுத்து விட்டு செல்லும்படி அறிவுறுத்தினர். உடனே அவர், சேலம் மாநகராட்சி, கலெக்டர் மற்றும் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கலெக்டர் முன்பே, பார்த்திபன் தனது கையை பிளேடால் கீறிக்கொண்டார். ரத்தம் வழிந்த நிலையில், அவரை போலீசார் குண்டுக்கட்டாக வெளியே தூக்கி சென்றனர். பின்னர் அவர், கையில் ஏற்பட்ட காயத்திற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் கூறியதாவது.

சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக ஏராளமானோர் வருகிறார்கள். ஆனால், எந்த மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. எங்கள் பகுதியில் அடிப்படை வசதிக்காக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மக்கள் மற்றும் அதிகாரிகள் கவனத்தை கவரும் வகையில் பல்வேறு வகையில் மனு கொடுத்தேன். எனவே, ரத்தம் சொட்ட சொட்ட மனு கொடுக்க வேண்டும் என முயற்சித்தேன். இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என பார்ப்போம்.

பார்த்திபன் ஏற்கனவே அடிப்படை வசதி கேட்டு உருளுதண்டம் போட்டு போராடி உள்ளார். மேலும், ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து தனிநபராக உண்ணாவிரதம் இருந்தும், எருமை மாட்டின் மீது அமர்ந்து வந்தும் மனு கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்