ஆந்திராவில் இருந்து கம்பத்துக்கு 240 கிலோ கஞ்சா கடத்த முயன்ற 2 பேர் கைது ஜீப் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து கம்பத்துக்கு, 240 கிலோ கஞ்சாவை ஜீப்பில் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-03-26 21:45 GMT
திண்டுக்கல்,

ஆந்திர மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக கம்பத்துக்கு கஞ்சா கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திண்டுக்கல் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் தலைமையில், இன்ஸ்பெக்டர் கவுசர்நிஷா உள்பட போலீசார் திண்டுக்கல்– வத்தலக்குண்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கே.பாறைப்பட்டி அருகே வந்த ஒரு ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தார்ப்பாயால் மூடப்பட்ட நிலையில் 8 மூட்டைகள் இருந்தன. அதனை திறந்து பார்த்தபோது, ஒவ்வொரு மூட்டையிலும் தலா 30 கிலோ வீதம் 240 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே ஜீப்பில் வந்த கம்பத்தை சேர்ந்த முருகன் மகன் கோபி (வயது 24), பெரியசாமி மகன் ராஜ்குமார் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப் மற்றும் 240 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் திண்டுக்கல் 3–வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு தீபா முன்னிலையில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.24 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்