ராயக்கோட்டை அருகே குழியில் தவறி விழுந்த 2 மாத குட்டி யானை மீட்பு

ராயக்கோட்டை அருகே குழியில் தவறி விழுந்த 2 மாத குட்டி யானையை மீட்டு தாயுடன் சேர்க்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2018-03-26 23:00 GMT
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்டது நாயக்கனப்பள்ளி கிராமம். இங்குள்ள ராமாபுரம் ஏரி கரையோரம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து நாயக்கனப்பள்ளி, ராமாபுரம், பீர்ஜேபள்ளி ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்ல பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாத்தகோட்டா வனப்பகுதியில் இருந்து 2 பெரிய யானைகளும், 2 மாதமே ஆன பெண் குட்டி யானையும் வந்தது. அப்போது குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியில் குட்டி யானை தவறி விழுந்து விட்டது. இதனால் மற்ற 2 யானைகளும் குட்டியை மீட்க விடிய விடிய போராடியும் முடியவில்லை. இதனால் 2 யானைகளும் பிளிறியபடி அங்கேயே இருந்தன.

யானைகளின் சத்தம் கேட்டு கிராமமக்கள் அங்கு வந்தனர். அப்போது குட்டி யானை குழியில் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஓசூர் வனச்சரகர் சீத்தாராமன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரிய யானைகளை விரட்டி விட்டு குட்டியை மீட்க முயன்றனர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லவில்லை.

இதனால் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து யானைகளை அங்கிருந்து விரட்டி போடூர்பள்ளம் காட்டுப்பகுதிக்கு துரத்தினர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் குழியில் விழுந்து கிடந்த குட்டி யானையை கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்தனர். அந்த குட்டி யானைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மீண்டும் போடூர்பள்ளம் காட்டுப்பகுதியில் உள்ள தாய் யானையுடன் சேர்க்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து வனச்சரகர் சீத்தாராமன் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராயக்கோட்டை பகுதியில் தாய் யானையுடன் சென்ற குட்டி ஒன்று பள்ளத்தில் தவறி விழுந்து விட்டது. அந்த குட்டியை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்டு காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டோம். ஆனால் அந்த குட்டியை மற்ற யானைகள் சேர்க்கவில்லை. குட்டி யானை மீது மனிதர்களின் கைப்பட்டாலே பெரிய யானைகள் அதை உடன் சேர்க்காது.

தற்போது குழியில் இருந்து மீட்கப்பட்ட குட்டி யானையை தாய் யானை தன்னுடன் சேர்க்குமா? என்று தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மேலும் குட்டியை தாய் யானையுடன் சேர்க்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினார். 

மேலும் செய்திகள்