சாலையில் கழிவுநீர் தேங்குவதால் அவதி பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;
பூந்தமல்லி,
பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு, ரைட்டர்ஸ் சாலையில் அடிக்கடி கழிவுநீர் தேங்குகிறது. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை நகராட்சி ஆணையரிடம் நேரில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ரைட்டர்ஸ் சாலையில் மீண்டும் கழிவுநீர் தேங்கியதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, கழிவுநீரில் நாற்று நடும் போராட்டமும் நடத்தினர். அதன் பிறகு கழிவுநீர் அகற்றப்பட்டது.
ஆனாலும் ரைட்டர்ஸ் சாலையில் மீண்டும், மீண்டும் கழிவுநீர் தேங்குவதும், அதனை அகற்றாமல் நகராட்சி ஊழியர்கள் அலட்சியம் காட்டுவதும் தொடர்கதையாகி உள்ளது.
இந்நிலையில், முன்னாள் நகர மன்ற தலைவர் பூவை ஞானம், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கந்தன் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ரைட்டர்ஸ் சாலையில் தேங்கி நின்ற கழிவுநீரை வாளிகளில் பிடித்து எடுத்து வந்திருந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் நகராட்சி அலுவலகத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் நகராட்சி கமிஷனர் சித்ராவிடம் மனு அளிக்க போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த போலீசார் அவர்களை நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இருப்பினும் போலீசாரின் தடுப்பை மீறி உள்ளே நுழைந்த பொதுமக்கள் நகராட்சி கமிஷனர் அறையை முற்றுகையிட்டு, கமிஷனரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும், வாளிகளில் பிடித்து எடுத்து வந்த கழிவுநீரை கமிஷனரின் அறை முன்பும், அலுவலகத்தின் பிற பகுதிகளிலும் ஊற்றினர். இதனால் நகராட்சி அலுவலகம் முழுவதும் துர்நாற்றம் வீசியது.
அதன் பின்னரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் நகராட்சி கமிஷனர் வெளியே வந்து மனு வாங்க வேண்டும் என்றும், தங்களின் குறைகளை கேட்டு அறிய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனாலும் கமிஷனர் வெளியே வராமல் இருந்தார்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பூந்தமல்லி டிரங்க் சாலையின் இருபுறமும் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
இந்தப்பகுதியில் ரைட்டர்ஸ் சாலை, டுபாஷ் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இந்த பகுதிகளில் மாடுகள் வளர்த்து பால் விற்கும் தொழில் செய்பவர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். அவர்கள் மாடுகளின் சாணம் அனைத்தையும் மழைநீர் கால்வாயில் கொட்டி விடுவதால் அதில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இங்கு மிகுந்த துர்நாற்றமும், தொற்றுநோய் எற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் கழிவுநீர் தேங்குவதை தடுக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மாறாக புகார் தெரிவிக்க வரும் பொதுமக்களை நகராட்சி கமிஷனர் அலட்சியப்படுத்தி பேசுகிறார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.