திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் காதுகேளாதோர் பள்ளி முன்னாள் மாணவர்கள் தர்ணா

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் காதுகேளாதோர் பள்ளி முன்னாள் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-26 21:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியை சேர்ந்த முன்னாள் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த னர். அவர்களுடன் காதுகேளாதோர் பள்ளி அறக்கட்டளை நிறுவன செயலாளராக இருந்த முருகசாமியும் உடன் வந்திருந்தார்.

கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக அனைவரும் கூட்ட அரங்குக்குள் செல்ல முயன்றனர். ஆனால் வாசலில் நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், காதுகேளாதோர் பள்ளி முன்னாள் மாணவ-மாணவிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கூட்ட அரங்குக்கு முன்பு முற்றுகையிட்டனர். ஒரு கட்டத்தில் முன்னாள் மாணவர்கள் போலீசாரை தள்ளி விட்டு உள்ளே செல்ல முயன்றனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக நுழைவுவாசலின் கதவை போலீசார் பூட்டினார்கள். இதனால் அவர்கள், நுழைவுவாசல் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அனுமதிக்கப்பட்ட 5 பேர் மட்டும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி அறக்கட்டளையின் நிறுவன செயலாளராக இருந்த முருகசாமி அளித்த மனுவில், “எனது பெயரில் உள்ள சொத்துக்களை எழுதிக்கொடுக்குமாறு மிரட்டி வருகிறார்கள். இதனால் நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரிக்கு கலெக்டர் உத்தரவிட் டார். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளி நல அதிகாரி ஜெகதீசன் வந்து, தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியை நிர்வகிப்பது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். அந்த ஆவணங்களை பெற்று உங்கள் தரப்பில் கோர்ட்டில் முறையிடுங்கள் என்றார். இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்