பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்திற்குள் லாரி புகுந்தது; பெண் பலி

காங்கேயம் அருகே பழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் லாரி புகுந்தது. இந்த விபத்தில் பெண் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-03-26 21:15 GMT
காங்கேயம்,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஓடந்துறையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி கண்ணம்மாள் (வயது 55). இவரும் அதே ஊரை சேர்ந்த உறவினர்களான முருகேசன் (62), ரேணுகா (52) மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

இவர்கள் நேற்று அதிகாலை 3 மணியளவில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தாராபுரம் ரோட்டில் உள்ள ஜெ.நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காங்கேயத்தில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற லாரி ஒன்று திடீரென்று பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதை பார்த்ததும் மற்ற பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். ஆனால் கண்ணம்மாள், முருகேசன், ரேணுகா ஆகியோர் லாரியில் சிக்கி படுகாயமடைந்தனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கண்ணம்மாள் இறந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனையில் முருகேசன், ரேணுகா ஆகியோருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர்மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்