ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் புதிய வரைபடத்திற்காக அதிநவீன ஜி.பி.எஸ். கருவியில் ஆய்வு

ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் புதிய வரைபடத்திற்காக மத்திய அரசின் சர்வே துறையினர் அதிநவீன கருவியில் ஆய்வு செய்தனர்.

Update: 2018-03-26 22:45 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் ரோடு பாலத்தில் நேற்று மத்திய அரசின் சர்வே துறையினர் செயற்கைகோள் மூலம் செயல்படும் அதிநவீன ஜி.பி.எஸ்.கருவி மூலம் கடல் நீர்மட்ட உயரம், கடல் பகுதியில் இருந்த கடற்கரை உள்ள தூரம், கடல் பகுதியில் இருந்து அமைந்துள்ள நிலப்பகுதிகள் மற்றும் வீடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சர்வேயர்கள் சந்திரமோகன்,தயாளன் உள்பட 3 பேர் ஈடுபட்டிருந்தனர்.

இதுகுறித்து மத்திய அரசின் சர்வே துறை சர்வேயர் ஒருவர் கூறியதாவது:-

புதிதாக வரைபடம், அதாவது மேப் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள வரைபடமோ கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு தயார் செய்யப்பட்டது. ஆனால் தற்போதோ தமிழகத்தில் அனைத்து கடற்கரை பகுதிகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதுடன் நிலப் பகுதிகளிலும் பல விதமான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

இதனால் புதிய வரைபடம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக உவரி கடற்கரையில் இருந்து கடந்த மாதம் தொடங்கி திசையன்விளை, நாசரேத், குலசேகரப்பட்டினம், தூத்துக்குடி, வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வை முடித்துள்ளோம். ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளில் ஆய்வை முடித்து விட்டு தற்போது பாம்பன் ரோடு பாலத்தில் ஆய்வு நடத்தி வருகிறோம்.

செயற்கைகோள் வசதியுடன் செயல்படும் இந்த ஜி.பி.எஸ்.கருவியில் நிலப்பகுதியில் உள்ள அனைத்து இடங்களும், கடலில் உள்ள நீர் மட்ட உயரம்,கடல் பகுதியில் இருந்து கடற்கரை ஒட்டியுள்ள வீடுகள், நிலப்பகுதிகள் முழுவதும் என துல்லியமாக பதிவாகும். கடல், கடற்கரையில் இருந்து சாலை மற்றும் பாலங்கள் அமைந்துள்ள தூரம் உள்ளிட்டவை அனைத்தும் சர்வே செய்யப்பட்டு வருகிறது. அடுத்ததாக ராமநாதபுரம், தேவிபட்டினம், தொண்டி, அக்கரைப்பேட்டை, புதுச்சேரி வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. வருகிற மே மாதம் இந்த ஆய்வு முடிவடையும். இந்த ஆய்வின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு அதன் பின்பு புதிய வரைபடத்தை உருவாக்கி அதை மத்திய அரசு வெளியிடும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்