112 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்: மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு

112 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2018-03-26 22:00 GMT
ஈரோடு,

ஈரோடு சென்னிமலை ரோடு ரெயில்வே பணிமனைக்கு எதிர்புறம் உள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-

நாங்கள் சென்னிமலை ரோடு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். அங்கு 112 குடும்பங்கள் உள்ளன. வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை முறையாக செலுத்தி வருகிறோம். இருப்பிட சான்று, ஆதார் அட்டை, மின் இணைப்பு போன்றவற்றையும் அரசு வழங்கி உள்ளது. நீண்ட நாட்களாகவே எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எங்களுக்கு நோட்டீசு வழங்கினார். அதில், கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதிக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். இதில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி வழங்கப்பட்ட கோர்ட்டு உத்தரவில், பிரச்சினையை சமரசமாக தீர்த்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று பலமுறை நேரிலும், தபால் மூலமாகவும் மனு கொடுத்துள்ளோம். எனவே பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் பொதுமக்கள் கூறிஇருந்தனர்.

மேலும் செய்திகள்