ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கலெக்டர்-அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த மூதாட்டியால் பரபரப்பு

ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கலெக்டர் உள்பட அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-03-26 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 194 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள நன்னை கிராமத்தை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 65). இவர், அப்பகுதியிலுள்ள ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கோர்ட்டு வரை சென்று போராடி வருகிறார். இதைத்தவிர அதிகாரிகளிடம் அடிக்கடி மனு கொடுத்தும் முறையிட்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த நல்லம்மாள், ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பான வரைபடத்தை கையில் சுருட்டி வைத்து கொண்டு ஆவணங்களுடன் உள்ளே சென்றார். பின்னர் அவர், ஏரி ஆக்கிரமிப்பினை இவ்வளவு காலம் அகற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பி கலெக்டர் உள்பட அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பிரச்சினை தொடர்பாக அங்கிருந்த அதிகாரிகள் விளக்கம் அளித்து அந்த மூதாட்டியை சமரசம் செய்ய முயற்சித்தனர். இதற்கிடையே கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் ஓடி வந்து, சத்தம் போட்டு கொண்டிருந்த அந்த மூதாட்டியின் கைகளை பிடித்து வெளியே இழுத்து வந்துவிட்டனர். அப்போது அந்த மூதாட்டி, மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார். நான் யாரிடமோ கையூட்டு பெற்று கொண்டு இவ்வாறு செய்வதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. ஏரி ஆக்கிரமிப்பு என்பது பொதுப்பிரச்சினை. எனவே இதில் உரிய தீர்வு காணப்பட வேண்டும் என அந்த மூதாட்டி நிருபர்களிடம் கூறினார்.

இதே போல், குன்னம் தாலுகா சாத்தநத்தம் கிராம பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்களுக்கு மண்எண்ணெயை சரிவர வினியோகிக்காமல் ரேஷன் கடைகளில் அலைக்கழிக்கின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

புதிய தமிழகம் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பாலாஜி தேவேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கொடுத்த மனுவில், பெரம்பலூர் தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ளது. சென்னை-திருச்சி நான்கு வழிசாலையில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகளில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் பலியாகும் போதும், இதர சம்பவங்களில் உயிரிழப்புகளின் போதும் அவர்களது உடல் களை பிரேத பரிசோதனை காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை மட்டுமே செய்யப்படுகிறது. முதல் நாள் மதிய நேரத்தில் இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டால், மறுநாள் மதியம் உடற்கூறு செய்து உறவினர்களிடம் இறந்தவர்கள் உடல் ஒப்படைப்பதற்கு அதிக நேரம் ஆகி விடுகிறது. இதனால் உறவினர்கள் 24 மணிநேரத்திற்கு மேலாக மாவட்ட அரசு மருத்துவமனையில் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது. எனவே டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்யும் நேரத்தை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை விரிவுபடுத்த வேண்டும். இறந்தவர்கள் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்காக சிறப்பு மருத்துவர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த கூட்டத்தில் தாட்கோ மூலம் மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் 5 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளாடு வாங்கி தொழில் செய்ய முழு மானியத்துடன் நிதியும், கவுல்பாளையம் ஊராட்சியில் தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் ஆடு, மாடு வளர்ப்பு செய்ய 9 நபர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான கடன் தொகைக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, தனித்துணை கலெக்டர் மனோகரன், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்