கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு தாக்கலில் மோதல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியல்

நாகை அருகே கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது மோதல் ஏற்பட்டது. இதனால் டி.டி.வி.தினகரன் அணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-26 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை அருகே உள்ள இருக்கை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 42). இவருடைய மனைவி பூவிழி (34). இவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள். ராதாமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சங்க தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். நீண்ட நேரம் கடந்த பிறகும் இவர்களை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்காததால் இதுகுறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மற்றும் கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆகியோரிடம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் புகார் தெரிவித்தனர்.

அப்போது அங்கு வந்த சிலர் பூவிழி, பாஸ்கரன் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பூவிழி, பஸ்கரனை அருகில் இருந்தவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி நாகை அரசு மருத்துவமனை எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்