திருச்சி விமானநிலையத்தில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமானநிலையத்தில் ரூ.40½ லட்சம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றி 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-03-26 23:00 GMT
செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. இவ்வாறு வெளி நாட்டில் இருந்து வரும் விமானங்களில் அவ்வப்போது சிலர் தங்கள் உடல் மற்றும் உடமைகளில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.

இந்த கடத்தல் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோலாம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமான பயணிகளிடம் திருச்சி வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பயணிகள் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகப்படும் படி இருந்த ஒரு பயணியிடம் விசாரணை நடத்திய போது அவர் திருச்சியை சேர்ந்த ஜலாலுதீன் என்று தெரிந்தது. பின்னர் அவர் வைத்து இருந்த உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதில் 1 கிலோ 40 கிராம் எடை உள்ள தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்து இருப்பது தெரிந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.32½ லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே விமானத்தில் வந்த மற்றொருவரை விசாரித்த போது அவர் மதுரையை சேர்ந்த அழகேசன் என்றும் அவர் 138 கிராம் எடை உள்ள தங்க சங்கிலி மறைத்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். இதே போன்று நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த சாதிக்பாட்ஷா (47) என்பவர் செல்போன் சார்ஜர் மற்றும் தனது உள்ளாடை ஆகியவற்றில் மறைத்து கடத்தி வந்த 134 கிராம் எடை உள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். 3 சோதனைகளிலும் மொத்தம் 40 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவற்றை கடத்தி வந்த 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

மேலும் செய்திகள்