தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும்

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2018-03-26 23:15 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட பாதுகாப்பு குழு சார்பில் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், அம்பை தாலுகாவில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் உள்ளது. அங்குள்ள காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாங்கள் வேலை செய்து வருகிறோம். கடந்த 4 தலைமுறைகளாக வாழ்ந்து வந்த எங்களுக்கு தற்போது எதிர்காலமும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது. தனியார் வசம் இருந்த தேயிலை தோட்டம் தற்போது அரசின் வசமானது. அரசு அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். முதல்கட்டமாக தேயிலை தோட்டத்துக்கு முறையாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள மலைப்பாதையை சீரமைக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு பொதுவினியோக ஊழியர் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் அந்த அமைப்பினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “நெல்லை மாவட்டம் தற்போது வறண்ட நிலையில் உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் இலவச கோதுமை வழங்க வேண்டும். கூடுதலாக அரிசி வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அனுமதி பெற்று ஆட்டோ ஓட்டி வருகிறோம். 6 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரத்து 48 பெர்மிட்டுக்காக செலுத்தி வருகிறோம். அங்கு ஆட்டோக்கள் நிறுத்தும் அளவுக்கு இடவசதி இல்லை. தொடர்ந்து ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டு வருவதால் தொழில் போட்டி அதிகளவில் உள்ளது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு இரவு நேரத்தில் பஸ்கள் வந்து செல்வதால் எங்கள் தொழில் பாதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி ரெயில் நிலையத்துக்கு பஸ் வந்து செல்வது தொடர்பாக நல்ல முடிவு எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

ஜேக்கே நேஷனல் பேந்தர்ஸ் பார்ட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், அமலை செடிகளை மாலையாக அணிந்து வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், “நெல்லை மாநகர பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாளையங்கோட்டையில் உள்ள பொஸ்தாகுளத்தை தூர்வார வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

சீர்மரபினர் நலச்சங்க தலைவர் ஜெபமணி தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “பழங்குடியினத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும். இலவச உயர்கல்வி அளிக்க வேண்டும். நலவாரிய உறுப்பினர்களை நியமனம் செய்ய புதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் சீர்மரபினர் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும்“ என்ற கூறப்பட்டு இருந்தது.

அம்பை அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி விக்னேஷ் குடும்பத்துடன் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “நான் அம்பை கூட்டுறவு நகர வங்கி கிளையில் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சம் கடன் வாங்கி தொழில் செய்து வருகிறேன். சரியாக தொழில் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. வங்கி அதிகாரிகள் கடனை திருப்பி செலுத்தும்படி கூறி நெருக்கடி கொடுக்கிறார்கள். எனது வங்கி கடனை தள்ளுபடி செய்வதற்கு உத்தரவிட வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

திராவிட மக்கள் விடுதலை கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் முத்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. அந்த தொகையை விரைவில் வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்