தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி தாக்குதல் 7 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

திருவள்ளூரில் தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி தாக்கிய 7 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Update: 2018-03-26 22:30 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த பெரியஎடப்பாளையம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை(வயது 31). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு காரில் வந்த புல்லரம்பாக்கத்தை சேர்ந்த சாய், பாலாஜி, சந்தோஷ், கார்த்திக் மற்றும் நெய்வேலியை சேர்ந்த தாவித், மைக்கேல் உள்பட 7 பேர் ஏழுமலையை வலுக்கட்டாயமாக தாங்கள் வந்த காரில் ஏற்றி கடத்திச்சென்றனர். காருக்குள் வைத்தே அவரை கையாலும், கம்பாலும் தாக்கினர்.

கொலை மிரட்டல்

காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் மலைமாதா கோவில் அருகே காரை நிறுத்தி அவரை இறக்கி விட்டனர். காரில் இருந்து இறங்கிய ஏழுமலை, தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். அதற்கு கடத்தல் ஆசாமிகள், கூச்சலிட்டால் கொலை செய்து விடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டினர்.

ஆனாலும் ஏழுமலை தொடர்ந்து கூச்சலிட்டத்தால் அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர். இதனால் பயந்துபோன கடத்தல் ஆசாமிகள், காரில் அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்று விட்டனர்.

பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் வந்த ஏழுமலை, சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், ஏழுமலையை காரில் கடத்திச்சென்ற சாய், பாலாஜி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு அவர்களை தேடி வருகின்றனர். மேலும் எதற்காக அவர்கள் ஏழுமலையை காரில் கடத்திச்சென்று தாக் கினர்? என விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்