தண்ணீர் என்று நினைத்து ஆசிட்டை குடித்த தொழிலாளி சாவு

திருச்செந்தூர் அருகே தண்ணீர் என்று நினைத்து ஆசிட்டை குடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-03-26 22:00 GMT
திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த ராமசாமிபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 51). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு வீரமணி (21) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். வீரமணி, திருச்செந்தூரில் உள்ள ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் காரின் பேட்டரிக்கு ஊற்றக்கூடிய ஆசிட்டை தனது வீட்டில் தண்ணீர் பாட்டிலில் ஊற்றி வைத்து இருந்தார்.

நேற்று முன்தினம் மதியம் செல்லத்துரை வெளியில் சென்று விட்டு, களைப்பில் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவர் தண்ணீர் பாட்டிலில் இருந்த ஆசிட்டை தவறுதலாக தண்ணீர் என்று கருதி குடித்து விட்டார். இதனால் சிறிது நேரத்தில் அவருடைய உதடுகள் வீங்கின. திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

உடனே அவரை திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். நேற்று காலையில் அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரசலையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருச்செந்தூர் அருகே தண்ணீர் என்று நினைத்து ஆசிட்டை குடித்தவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்