கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி திரளானவர்கள் பங்கேற்பு

நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நேற்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-03-25 22:00 GMT
சங்கரன்கோவில்,

ஏசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நடந்தது. தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

புனித வாரத்தின் தொடக்க நாளில் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு பவனி நேற்று நடந்தது. இதையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை தோரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

பாளையங்கோட்டை சேவியர் கிறிஸ்தவ ஆலயம் முன்பு பிஷப் ஜூடுபால்ராஜ் தலைமையிலும், நெல்லை திருமண்டல நிர்வாகி பில்லி தலைமையிலும் தவக்கால குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, கைகளில் குருத்தோலை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.

பாளையங்கோட்டை சேவியர் காலனியில் உள்ள தூய பேதுரு ஆலயம் முன்பு குருத்தோலை பவனி நடந்தது. இதுபோல் நெல்லை, பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி நடந்தது.

வருகிற 29-ந் தேதி புனித வியாழக்கிழமை அன்று பாதம் கழுவும் நிகழ்ச்சியும், 30-ந் தேதி புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற 1-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


இதேபோல் சங்கரன்கோவிலில் உள்ள பரி பவுல் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நேற்று நடைபெற்றது. இதில் ஆலய குருவானவர் மார்ட்டின், சபை ஊழியர் பவுல், யோசேப்பு, நிர்வாகிகள் ஜான்முத்துராஜ், டேவிட் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

கடையம் ஆர்.சி. ஆலயத்தில் இருந்து குருத்தோலையை ஏந்தியபடி சி.எஸ்.ஐ. திருச்சபைக்கு சென்றனர். பின்னர் அங்கு கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து ஆர்.சி. மற்றும் சி.எஸ்.ஐ. திருச்சபை மக்கள் குருத்தோலையை ஏந்தியபடி ஆர்.சி. திருச்சபையை அடைந்தனர். குருத்தோலை பவனியில் பங்கு தந்தைகள் அசோக் வினோ, இன்னாசி, சி.எஸ்.ஐ. சேகரகுரு அப்பாத்துரை உள்பட சபை மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கடையத்தை அடுத்துள்ள மேட்டூர் சி.எஸ்.ஐ. பரி திரித்துவ ஆலயத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதனை சேகரகுரு ஜான் துரைசிங் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டல பேராயர் கிறிஸ்துதாஸ் வேத செய்தியளித்தார். நிகழ்ச்சியில் குருவானவர் நேசபாண்டியன், பேராயர் உதவி குரு இம்மானுவேல், சேகர செயலாளர் பாக்கியநாதன் ஏசுவடியான், ஆலய செயலாளர் சிம்சோன் தேவதாசன், பொருளாளர் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்