கிருமாம்பாக்கம் ஏரியை சுற்றுலா மையமாக்க நடவடிக்கை: கவர்னர் கிரண்பெடி நேரில் ஆய்வு

கிருமாம்பாக்கம் ஏரியை சுற்றுலா மையமாக்க குழு அமைக்கப்படும். விரைவில் இங்கு படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேரில் ஆய்வு செய்த கவர்னர் கிரண்பெடி கூறினார்.

Update: 2018-03-25 23:15 GMT
பாகூர்,

கிருமாம்பாக்கத்தில் உள்ள ஏரியை சுற்றுலா மையமாக்க கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஏனோ இந்த திட்டம் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி கிருமாம்பாக்கம் ஏரியை சுற்றுலா மையமாக்க நடவடிக்கை எடுத்தார். இதற்காக கவர்னர் கிரண்பெடியை சந்தித்து வேல்ராம்பட்டு ஏரி, கனகன் ஏரியை போல் கிருமாம்பாக்கம் ஏரியையும் சுற்றுலா மையமாக்க கேட்டுக் கொண்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட கவர்னர் கிரண்பெடி நேற்று காலை கிருமாம்பாக்கம் ஏரியை பார்வையிட வந்தார். அவரை அமைச்சர் கந்தசாமி வரவேற்று அழைத்துச் சென்றார். 4 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட ஏரியை கவர்னர் கிரண்பெடி முழுவதுமாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஏரியை சுற்றுலா மையமாக்கும் திட்ட அறிக்கையை கவர்னர் பார்வையிட்டார். கவர்னருடன் பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் சண்முகசுந்தரம், சுற்றுலாத்துறை இயக்குனர் முத்துசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ருத்ரகவுடு, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தர்ராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள், அதிகாரிகளிடம் கவர்னர் கிரண்பெடி கூறியதாவது;-

முதலில் இந்த ஏரியை தூய்மைப்படுத்த வேண்டும். பின்னர் ஏரிக்கரையில் நடைபாதை அமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு நிதியை எதிர்பார்க்காமல் தன்னார்வலர்கள் இதை செய்ய வேண்டும். இந்த ஏரியில் வலைகள் மூலம் மீன் பிடிக்க அனுமதிக்காமல் தூண்டில் மூலம் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். வெளிமாநில சுற்றுலா பயணிகளை கவர கிராமப்புற உணவகங்களை இங்கு தொடங்க வேண்டும்.

கிருமாம்பாக்கம் ஏரியை சுற்றுலா மையமாக்க பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந் தேதி முதல் இந்த ஏரியில் படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார். 

மேலும் செய்திகள்