சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க எண்ணற்ற திட்டங்கள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.

Update: 2018-03-25 23:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தேரடி வீதியில் திருவூடல் தெரு சந்திப்பில் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா கலை விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்ட சுற்றுலா அலுவலர் சு.சின்னசாமி வரவேற்றார். விழாவை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆன்மிக சிறப்பும், தொன்மை சிறப்பும் மிக்க திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காகவும், சுற்றுலா மேம்பாடு செய்வதற்கும் எண்ணற்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

திருவண்ணாமலையில் நினைத்தாலே முக்தி தரும் அருணாசலேஸ்வரர் கோவில் உலக மக்களை தன்னகத்தே ஈர்க்கின்ற பஞ்சபூத தலங்களுள் அக்னித் தலமாக விளங்குகிறது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் தமிழ்நாடு மட்டும் அல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் படவேடு ரேணுகாம்பாள் கோவில், திருவேந்தூர் வேதபுரீஸ்வரர் கோவில், ஏரிகுப்பம் எந்திர சனீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்கள் ஆன்மிக பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் சென்று வருகின்ற ஆன்மிக தலங்களாக விளங்குகின்றன. மேலும், நமது மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் சாத்தனூர் அணை ஒரு சிறந்த பொழுதுபோக்கு மையமாக அமைந்துள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டின் பாரம்பரிய கைவினை பொருட்கள் மற்றும் உணவு வகைகள் மீது ஆர்வம் கொண்டுள்ளனர். விழாக்களில் குறிப்பாக நாட்டிய மற்றும் இசை விழாக் களில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்ப்பதால் வருடம் முழுவதும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் தமிழகத்தின் கலை மற்றும் பண்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாத் துறை மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலைக்கு பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக வருகின்ற பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக ரூ.4 கோடியில் சாலையின் இருபுறமும் கான்கிரீட் பாதை அமைத்து, டைல்ஸ் பதிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன. மேலும், சுற்றுலா வரவேற்பு மையம் கட்டுவதற்கு ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன என அவர் பேசினார்.

விழாவில் தூசி மோகன் எம்.எல்.ஏ., திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய தலைவர் அமுதா அருணாச்சலம், வணிகவரி ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் பெருமாள் நகர் கே.ராஜன், முன்னாள் நகராட்சி தலைவர் வி.பவன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் செய்தி தொடர்பாளர் முத்தமிழ்செல்வன் நன்றி கூறினார்.

விழாவையொட்டி திருப்பத்தூர் திருகுமரன் கைசிலம்பம் ஆட்டம், திருச்சி முத்துக்குமாரின் காளி, கருப்புசாமி ஆட்டம், பெரம்பலூர் செல்லத்துரையின் கரகாட்டம், காவடி ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

மேலும் செய்திகள்