கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்ட பெண் கைது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்ட பெண் கைது செய்யப்பட்டார். போலீஸ்காரர் உள்பட 2 பேர் சிக்கினர்

Update: 2018-03-25 23:00 GMT
கம்பம்,

கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சாமி (வயது 36). இவர், கம்பத்தில் கிராமச்சாவடி தெருவில் விளையாட்டு ஆடை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரும், அனுமந்தன்பட்டியை சேர்ந்த சுகந்தி (32) என்பவரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சஞ்சய் (13) என்ற மகன் உள்ளார். இந்தநிலையில் சுகந்திக்கும், அதே பகுதியை சேர்ந்த சுதாகர் (39) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர், ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்து வருகிறார்.

கடந்த 18-ந் தேதி சாமி, தனது கடையில் வைத்து மனைவியின் செல்போனை ஆய்வு செய்தார். அப்போது சுகந்தியும், போலீஸ்காரர் சுதாகரும் கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ள ஆடியோ பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் சாமி புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் சுகந்தி, சுதாகர் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கூடலூர் எல்லை தெருவை சேர்ந்த பாண்டியராஜன் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

கம்பம் கிராமச்சாவடி தெருவில் உள்ள விளையாட்டு ஆடை விற்பனை கடையை சுகந்தி நிர்வகித்து வருகிறார். அவர் வர்த்தக தொடர்புக்காக தனியாக செல்போனும் வைத்துள்ளார். அந்த போன் மூலம் தன் கள்ளக்காதலனுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். கடந்த 18-ந்தேதி சுகந்தி வைத்திருந்த செல்போனை எடுத்து சாமி பார்த்துள்ளார். அப்போது தனது மனைவி கள்ளக்காதலில் ஈடுபடுவதும், அவருடன் சேர்ந்து தன்னை கொலை செய்ய திட்டம் போட்டதும் தெரியவந்தது.

தனது மனைவி, கள்ளக்காதலனுடன் பேசிய உரையாடல் அந்த செல்போனில் தாமாகவே பதிவாகி இருந்தது. இது பற்றி சுகந்திக்கு தெரியவில்லை. அந்த உரையாடலை கேட்ட சாமி அதிர்ச்சியடைந்தார். கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரிந்ததால் சுகந்தி வீட்டைவிட்டு வெளியேறி விட்டார். இதையடுத்து செல்போன் ஆதாரங்களை எடுத்துக்கொண்டு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டு கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் சுகந்தியை வலை வீசி தேடி வந்தனர். இந்தநிலையில் உத்தமபாளையம் அருகேயுள்ள ஆனைமலையான்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் சுகந்தி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலையில் போலீசார் சுகந்தியை கைது செய்தனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்ய பெண் திட்டமிட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்