ரேலியா அணைக்கு தண்ணீர் வருவதை தடுத்து தடுப்பணை கட்டும் பணி: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

குன்னூர் ரேலியா அணைக்கு தண்ணீர் வரும் பகுதியில் வனத்துறையினர் தடுப்பணை கட்டும் பணியை தொடங்கி உள்ளனர். இதனால் குன்னூர் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2018-03-25 22:30 GMT
குன்னூர்,

குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. 43.7 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். ரேலியா அணைக்கு சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தள்ளி ஜெகதளா பேரூராட்சியின் தடுப்பணை உள்ளது.

ரேலியா அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் போது வெளியேறும் உபரி நீர் ஜெகதளா பேருராட்சியின் தடுப்பணைக்கு செல்கிறது. இந்த தண்ணீரை ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட 6 கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் ரேலியா அணைக்கு பின்புறம் வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக தடுப்பணை கட்ட வனத்துறை முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை தொடங்கி உள்ளனர். இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் ஆரம்ப கட்ட பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ரேலியா அணைக்கு தண்ணீர் வரும் பகுதியில் வனத்துறையினர் இந்த தடுப்பணை கட்டுகின்றனர். இதனால் குன்னூர் மக்களுக்கு குடிநீர் வழங்கும் ரேலியா அணைக்கு நீர் வரத்து பாதிக்கப்பட்டு, அணை வறண்டு விடும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் இதன் உபரி நீரை நம்பியுள்ள ஜெகதளா பேரூராட்சி பகுதி பொதுமக்களும் குடிநீர் இன்றி பாதிக்கப்படுவார்கள்

எனவே வனத்துறையினர் பொது மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தடுப்பணையை மாற்று இடத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்