காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பதாகையை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையையொட்டி கிறிஸ்தவர்கள் ஊர்வலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பதாகையை ஏந்தி சென்றனர்.;

Update: 2018-03-25 22:45 GMT
கரூர்,

கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தொடங்கியது. தினமும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையாக கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கரூர் டவுனில் சி.எஸ்.ஐ. தேவாலயத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் நேற்று காலை கையில் குருத்தோலையுடன் ஊர்வலமாக சென்றனர். தேவாலயத்தில் இருந்து ஊர்வலத்தை மறை மாவட்ட தலைவர் பாபு அலெக்சாண்டர் கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார். ஊர்வலம் ஜவகர் பஜார், மனோகரா கார்னர், பஸ் நிலையம் அருகே, திண்ணப்பா தியேட்டர், வடக்கு பிரதட்சண சாலை வழியாக தேவாலயத்தை வந்தடைந்தது.

ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலையை ஏந்தியப்படி சென்றனர். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வுரிமையை காத்திட வேண்டும், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ஆதி திராவிடர்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு உரிய சட்டபாதுகாப்பு வழங்க வேண்டும், மத வன்முறையை தடுத்திட வேண்டும், மத நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையும் காத்திட வேண்டும், மீத்தேன் திட்டத்தை கைவிட வேண்டும், விளை நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கிறிஸ்தவர்கள் கையில் ஏந்தி சென்றனர். இதேபோல நேற்று மாலை புனித தெரசம்மாள் தேவாலயத்தில் இருந்து குருத்தோலை ஞாயிறையொட்டி ஊர்வலம் நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். வருகிற 30-ந் தேதி புனித வெள்ளியாக கடைபிடிக்கப்பட உள்ளது. தவக்காலம் முடிந்து ஈஸ்டர் பண்டிகை அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

இதேபோல் குளித்தலையில் புனித கிறிஸ்தீனம்மாள் ஆலய பங்கு குரு இறைமக்களும் மற்றும் கிறிஸ்து அரசர் ஆலய பங்கு குரு இறைமக்களும் இணைந்து நடத்திய குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்ச்சி பங்கு குருமார்கள் தலைமையில் நடந்தது. இதில் குருத்தோலை ஏந்தி பாடல்கள் பாடியவாறு ஊர்வலமாக குளித்தலை காந்திசிலையில் இருந்து புறப்பட்டு பேராளம்மன் கோவில் தெரு, பெரியாண்டார் தெரு, பஜனைமடம், கடைவீதி வழியாக புனித கிறிஸ்தீனம்மாள் ஆலயத்தை சென்று அடைந்தனர். அதனை தொடர்ந்து ஆலையத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

அரவக்குறிச்சி சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் அரவக்குறிச்சியில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலையுடன் சென்றனர். தொடர்ந்து கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. 

மேலும் செய்திகள்