தமிழகம் முழுவதும் மே 21-ந்தேதி ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

தமிழகம் முழுவதும் மே 21-ந்தேதி ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி உண்ணாவிரதம் இருப்பது என திருச்சியில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-03-25 22:45 GMT
திருச்சி,

தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் வரவேற்று பேசினார். அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழகத்தில் ரேஷன் கடைகள் குறைகள் இன்றி சிறப்பாக செயல்பட பொது வினியோக திட்டத்திற்கு என தனி துறை உருவாக்கப்படவேண்டும். குடோனில் இருந்து ரேஷன் கடையில் பொருட்களை இறக்கி வைக்கும் வரை எடையளவு குறையாமல் இருக்க 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற மே மாதம் 4-ந்தேதி சென்னை அரசு விருந்தினர் விடுதி அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி, முதல்- அமைச்சரிடம் மனு கொடுப்பது.

மே 21-ந்தேதி மாநிலம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் செய்து, மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகங்கள் முன் உண்ணாவிரதம் இருப்பது. மேலும் ஸ்மார்ட் கார்டு, பி.ஓ எஸ். கருவிகள் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் தேவை இல்லாத ஆய்வு பணிகளை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்வது,

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் பிரகாஷ், செல்லத்துரை, விசுவநாதன், பொதுச்செயலாளர் ஜெயச்சந்திர ராஜா, பொருளாளர் நெடுஞ்செழியன், திருச்சி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்