ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் மே மாதம் 8-ந் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்

ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பு சார்பில் வருகிற மே மாதம் 8-ந் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளதாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் கூறினார்.

Update: 2018-03-25 22:00 GMT
ஈரோடு,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, ஜாக்டோ -ஜியோ சென்னை மறியல் மற்றும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் 3-ம் ஆண்டு தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. விழாவுக்கு ஈரோடு வட்டார தலைவர் பெ.சே.மோகன்ராஜ் தலைமை தாங்கினார். மேற்கு மண்டல செயலாளர் வின்சென்ட், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மாநில பொதுச்செயலாளர் ச.மயில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் மாவட்ட செயலாளர் சண்முகம், தலைவர் லூர்து பெலிக்ஸ் ஸ்டீபன், பொருளாளர் தமிழ்ச்செழியன், மாநில செயற்குழு உறுப்பினர் அருள்சுந்தர ரூபன் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள். முன்னதாக வட்டார பொதுச்செயலாளர் சிவக்குமார் வரவேற்று பேசினார். முடிவில் வட்டார பொருளாளர் பெ.மோகன்ராஜ் நன்றி கூறினார்.

முன்னதாக மாநில பொதுச்செயலாளர் ச.மயில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். இதைத்தொடர்ந்து வருகிற மே மாதம் 8-ந் தேதி ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பு சார்பில் சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது.

1.4.2003-ம் ஆண்டுக்கு பிறகு சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களிடம் பிடித்தம் செய்த தொகையை தேசிய ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்தில் டெபாசிட் செய்திருக்க வேண்டும். ஆனால் அந்த தொகையை என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தொடக்க கல்வித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கலந்தாய்வு நடத்தப்பட்டு தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி கலந்தாய்வு நடத்தப்படும் என தொடக்க கல்வி இயக்குனர் அறிவித்து திடீரென அதனை ரத்து செய்து விட்டார்.

எனவே பதவி உயர்விற்கான கலந்தாய்வை நடத்தக்கோரி நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்