மும்பை வழியாக திருச்சியில் இருந்து டெல்லிக்கு விமான சேவை தொடங்கியது

திருச்சியில் இருந்து மும்பை வழியாக டெல்லிக்கு விமானசேவை தொடங்கியது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமானம் மும்பை வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

Update: 2018-03-25 23:00 GMT
செம்பட்டு,

திருச்சி விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூர், இலங்கை, சவுதிஅரேபியா, மலேசியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு விமானசேவை உள்ளது. உள்நாட்டு சேவையாக திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் திருச்சியில் இருந்து மும்பை மற்றும் பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் ஜெட்ஏர்வேஸ் நிறுவனம், திருச்சியில் இருந்து மும்பை வழியாக டெல்லிக்கு புதிய விமான சேவை இயக்கப்படும் என்று அறிவித்தது. இந்த விமானம் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை திருச்சியில் இருந்து மும்பை வழியாக டெல்லிக்கு இயக்குவது என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திருச்சியில் இருந்து மும்பை வரை மட்டுமே இயக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்த விமான சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருச்சி விமானநிலையத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, குமார் எம்.பி., கலெக்டர் ராஜாமணி, விமானநிலைய இயக்குனர் குணசேகரன், விமானநிலைய மேலாளர் சென் மற்றும் ஜெட்ஏர்வேஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று பகல் மும்பையில் இருந்து திருச்சி வந்த விமானத்துக்கு விமானநிலையத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து (வாட்டர் சல்யூட் முறையில்) வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சியில் இருந்து இந்த விமானம் தினமும் பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு மாலை 4.40 மணிக்கு மும்பை சென்றடையும். அதன்பிறகு அங்கிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு டெல்லி சென்றடையும். இதேபோல் மறுநாள் காலை இந்த விமானம் 9 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு பகல் 11.30 மணிக்கு மும்பை சென்று, அங்கிருந்து பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு 2.10 மணி அளவில் திருச்சிக்கு வந்து சேரும்.

திருச்சி-மும்பை-டெல்லி விமானசேவை தொடங்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் தொழில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், வெளிநாட்டு பயணிகளும் அதிகளவில் வருவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானத்தின் பயணக்கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3,600 முதல் ரூ.8,600 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று திருச்சியில் இருந்து மும்பை சென்ற அந்த விமானத்தில் 120 பேர் பயணித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்