உடன்குடி அனல்மின் நிலைய பணிகள் விரைவில் முடிந்து உற்பத்தி தொடங்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
உடன்குடி அனல்மின் நிலைய திட்ட பணிகள் விரைவில் முடிந்து உற்பத்தி தொடங்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
உடன்குடி,
உடன்குடி மெயின் பஜார் பாரதி திடலில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். உடன்குடி ஒன்றிய அ.தி.மு.க சார்பில் ஜெயகண்ணன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, 5 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை வழங்கினார். பின்னர் கூட்டத்தில் அவர் பேசும் போது கூறியதாவது;-
கடந்த வாரம் இதே இடத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எதிர்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் இந்த தொகுதி புறக்கணிக்கப்படுவதாக இந்த தொகுதி எம்.எல்.ஏ. பேசியுள்ளார். ஜெயலலிதா தேர்தல் களம் இறங்கியதே திருச்செந்தூர் தொகுதி தான். அ.தி.மு.க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தினார். அப்போது இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.
அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்து இடைத் தேர்தலில் பிரசாரம் செய்ய அனுப்பினார். ஜெயலலிதா பிரசாரம் செய்த பின்னர் தான் எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்ய வந்தார். அதனால் தான் திருச்செந்தூர் தொகுதியை ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும், அதன் பின்னர் தற்போதைய ஆட்சியிலும் புறக்கணிக்கவில்லை.
உடன்குடி அனல் மின்நிலைய திட்டம் புத்துயிர் பெற்று விரைவாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவடைந்து உற்பத்தி தொடங்கியதும், ஏராளமான தொழிற் சாலைகள் உருவாகும். இதைப் போல பல்வேறு திட்டங்கள் இந்த தொகுதிக்கு ஒதுக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.