பவானிசாகர் அருகே பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை; ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன

பவானிசாகர் அருகே பலத்த சூறாவளிக்காற்றுடன் மழைபெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.

Update: 2018-03-24 22:00 GMT
புஞ்சைபுளியம்பட்டி, 

பவானிசாகர் அருகே உள்ள சிந்தன்குட்டை, அய்யம்பாளையம் பகுதியில் விவசாயிகள் ரஸ்தாளி, பூவன், மொந்தன், ரொபஸ்டா உள்ளிட்ட பல்வேறு ரக வாழைகளை சாகுபடி செய்துள்ளார்கள். தற்போது வாழை மரங்கள் குலை தள்ளிய நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ளது. பவானிசாகரில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு காற்று வீசியது. சிறிது நேரத்தில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழைபெய்தது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சிந்தன்குட்டை, அய்யம்பாளையம் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘பவானிசாகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் கடும் வறட்சி நிலவுகிறது. மழை பெய்யவில்லை. எனினும் கஷ்டப்பட்டு வாழைகள் பயிரிட்டோம். அதன் பயனாக வாழைகள் நன்கு வளர்ந்தது. தற்போது குலை தள்ளிய நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்தது. சில நாட்களில் அறுவடை செய்ய நினைத்திருந்தோம். இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்

ஆனால் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்துவிட்டன. இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் சாய்ந்த வாழைகளை பார்வையிட்டு எங்களுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர்.

மேலும் செய்திகள்