கெங்கவல்லி அருகே 20 பவுன் நகையை திருடிய வாலிபர் கைது

கெங்கவல்லி அருகே 20 பவுன் நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-24 22:00 GMT
கெங்கவல்லி, 

கெங்கவல்லி அருகே கூடமலை எம்.ஜி.ஆர். சிலை பின்புறம் வசித்து வருபவர் கிருஷ்ணராஜ் (வயது 52), விவசாயி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி ஜெயந்தியுடன் ஆத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மகளின் திருமண பத்திரிகை வைக்க சென்றார்.

அதன்பிறகு மாலையில் அவர் திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டின் உள்ளே பீரோ திறந்திருந்ததுடன், துணிகள் கலைந்து இருந்தன. அங்கு மகளின் திருமணத்திற்கு வைத்து இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் பணம் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்ததை கண்டு கிருஷ்ணராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து திருடனை பிடிக்க, ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் குற்றப்பிரிவு போலீசாரை கொண்ட தனிப்படையை ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்.கார்த்திக்குமார் அமைத்தார்.

இந்த நிலையில் கெங்கவல்லி பகுதியில் நேற்று ரோந்து பணியில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதை அடுத்து, கெங்கவல்லி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கல்ஒட்டர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் வெங்கடேசன்(23) என்பதும், இவர் மீது 15 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. கூடமலையில் கிருஷ்ணராஜ் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு பட்டப்பகலில் வீட்டின் பின்பக்கமாக உள்ளே புகுந்து 20 பவுன் நகையை அவர் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 17 பவுன் நகையை மீட்டனர்.

மேலும் செய்திகள்