வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் கடல் சீற்றம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2018-03-24 23:00 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது கோடியக்கரை. இங்கு உள்ள கடல் பகுதியில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்கள் அதிக அளவு கிடைக்கும். இதன் காரணமாக தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, காரைக்கால், ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கோடியக்கரை பகுதியில் தங்கி இருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி இருந்து மீன்பிடித்து வருகிறார்கள். தற்போது கோடியக்கரையில் மீன்பிடி சீசன் முடிவடையும் நிலையில் உள்ளது. அதேநேரத்தில் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை கடல் பகுதியில் மீன்பிடி சீசன் தொடங்கி உள்ளது. இதனால் வெளியூர் மீனவர்கள் ஆறுகாட்டுத்துறை பகுதியில் மீன்பிடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஆறுகாட்டுத்துறை பகுதி யில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் தங்கள் படகுகளை கடற்கரையில் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கோடியக்கரையில் மீன்பிடி சீசனாகும். கோடியக்கரையில் சீசன் முடிவடையும் நேரத்தில் ஆறுகாட்டுத்துறையில் சீசன் தொடங்கி விடும். செப்டம்பர் மாதம் வரை ஆறுகாட்டுத்துறையில் சீசன் நீடித்திருக்கும்.

நேற்றுமுன்தினம் ஆறுகாட்டுத்துறையில் வஞ்சிரம், திருக்கை, சூரை ஆகிய மீன்கள் கிடைத்தன. சீசன் தொடங்கி இருக்கும் நேரத்தில் கடல் சீற்றமாக இருப்பது வேதனை அளிக்கிறது. கடல் சீற்றம் விரைவில் தணியும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு மீனவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்