ஆற்றை கழிப்பிடமாக பயன்படுத்தக்கூடாது: பொதுமக்களுக்கு கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்

ஆற்றை கழிப்பிடமாக பயன்படுத்தக்கூடாது, நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று கவர்னர் கிரண்பெடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2018-03-24 21:45 GMT
திருக்கனூர்,

கவர்னர் கிரண்பெடி புதுவையில் இருக்கும் வார இறுதி நாட்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி நேற்று காலை திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு - மணலிப்பட்டு இடையே ஓடும் சங்கராபரணி ஆற்றை ஆய்வு செய்ய கவர்னர் கிரண்பெடி வந்தார். அவரை மண்ணாடிப்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.பி.ஆர்.செல்வம் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் அங்குள்ள படுகை அணையுடன் கூடிய மேம் பாலத்தை பார்வையிட்ட கவர்னர் கிரண்பெடி, அணையில் தண்ணீர் தேக்கி வைப்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது அணையின் உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டார். பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நலத்திட்ட பணிகளை நிறைவேற்ற பொதுமக்களும் ஒத்துழைக்கவேண்டும். அப்போதுதான் திட்டப்பணிகள் முழுமையாக ஏழை மக்களை சென்றடையும். நீர்நிலைகளில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டக்கூடாது. நீராதாரங்களை முறையாக பராமரித்தால் வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு வராது.

அதேபோல் நீராதார பகுதிகளை யாராவது அசுத்தம் செய்தால் அவர்களை பொதுமக்கள் எச்சரிக்கை செய்யவேண்டும். சங்கராபரணி ஆற்றை கழிப்பிடமாக பயன்படுத்தக்கூடாது. தனிநபர் கழிவறை கட்ட அரசு மானியம் வழங்குகிறது. அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வீடுகளில் கழிவறை கட்டிக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து, பொது இடத்தை அசுத்தம் செய் பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிறுவர்களுக்கு கவர்னர் விசில்கள் வழங்கினார். இந்த ஆய்வின்போது மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீத்தாராமன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்