கிறிஸ்தவ தேவாலயம் இடிக்கப்பட்டதை கண்டித்து கடலூரில் சிறுபான்மை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கிறிஸ்தவ தேவாலயம் இடிக்கப்பட்டதை கண்டித்து கடலூரில் சிறுபான்மையின அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்,
தமிழ்நாடு அனைத்து கிறிஸ்தவர்கள் பாதுகாப்பு சங்கம், அனைத்து சிறுபான்மை மக்கள் உரிமை இயக்கம் மற்றும் மாவட்ட சிறுபான்மை மக்கள் நல கட்சியின் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து கிறிஸ்தவர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் ரமேஷ் பிரபாகர், ஆற்காடு லூத்தரன் திருச்சபையின் செயலாளர் பிராங்கிளின் ஜோசப், புனித எபிபெனி சி.எஸ்.ஐ. ஜேக்கப், தமிழ் லூத்தரன் திருச்சபை போதகர் நீதிதாஸ் நிமலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் எம். எல்.ஏ. இள.புகழேந்தி, காங்கிரஸ் கட்சியின் மாநில சொத்து மீட்பு குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
மதுரை, சென்னையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிக்கப்பட்டது, தஞ்சையில் கிறிஸ்தவ தேவாலயம் எரிப்பு, மத போதகர்களை தாக்கியது, கூவத்தூரில் மத போதகரை கொடூரமாக கொலை செய்தது, அமைதியான தமிழகத்தில் வன்முறையை தூண்டும் செயல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய செயலாளர் ரிச்சர்டு தேவநாதன், பேராசிரியர் குழந்தைவேலனார், புரட்சிகர இளைஞர் முன்னணி பாலு மற்றும் பல்வேறு கிறிஸ்தவ தேவாலயத்தை சேர்ந்த போதகர்கள், சிறுபான்மையினர், அரசியல் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். முன்னதாக அகஸ்டின் பிரபாகரன் வரவேற்று பேசினார். முடிவில் பாதிரியார் தேவ இரக்கம் நன்றி கூறினார்.