தி.மு.க. பிரமுகர் வி.கே.குருசாமி மீதான வழக்கு ரத்து, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தி.மு.க. பிரமுகர் வி.கே.குருசாமி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-03-24 22:15 GMT
மதுரை,

மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த வி.கே.குருசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தலைவராக தி.மு.க. சார்பில் இருந்தேன். கடந்த 2011-ல் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது கட்சிப்பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது 54-வது வார்டு அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் மயில்முருகன் என்பவரை நான் மற்றும் சிலர் ஆயுதங்களுடன் சென்று தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மதுரை தெப்பக்குளம் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் நடந்ததாக 4 மாதத்திற்கு பின்பே புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை மதுரை தலைமை குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக மட்டுமே எங்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். எனவே கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும். விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல நல்லுசாமி, காளஸ்வரன், அலெக்ஸ், சின்னகண்ணாயிரம் ஆகியோரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜரானார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப்பதிவு செய்து தொந்தரவு தருவதாக இந்த கோர்ட்டு கருதுகிறது. 4 மாதத்துக்கு பின்னர் புகார் அளித்தது, அதுவரை புகார்தாரருக்கு காயம் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது என்பதெல்லாம் தெரிந்தும் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததன் மூலம் சட்டத்தை தவறாக பயன்படுத்தியது தெரிகிறது. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க கோர்ட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அரசியல் மற்றும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடக்கும் வழக்கின் விசாரணை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்