அரியலூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-03-24 22:45 GMT
அரியலூர்,

பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு) சார்பில் பெரம்பலூர் பாலக்கரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ராமர் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடன் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அருள்ஜோதி, வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் பாரதிவளவன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மரியதாஸ், தயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூரிலும்...

இதேபோல், அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் பஞ்சாபிகேஷன் தலைமை தாங்கினார். அனைத்துதுறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலமுறை ஓய்வூதியம் பெறும் சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் வளர்ச்சித்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறை உள்பட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்