திருப்பூரில், நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு 3 பேர் உயிர் தப்பினர்
திருப்பூரில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காரில் வந்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் பி.என்.ரோடு சாந்தி தியேட்டர் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி(வயது 32). இவர் அங்குள்ள இருசக்கர வாகன ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். வெள்ளியங்கிரி தனது உறவினரான திருப்பூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த திருமூர்த்தி(55), தனது நண்பரான பூலுவப்பட்டியை சேர்ந்த சுரேஷ்(40) ஆகியோருடன் நேற்று முன்தினம் மதியம் திருப்பூரில் இருந்து தனது காரில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
பின்னர் கோவிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு நேற்று அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர். காரை வெள்ளியங்கிரி ஓட்டி வந்தார். திருமூர்த்தி, சுரேஷ் ஆகியோர் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். மாலை 6.45 மணி அளவில் திருப்பூர் வளம் பாலம் அருகே அவர்கள் கார் வந்து கொண்டிருந்தபோது, ‘ஸ்டியரிங்’கின் கீழ் பகுதியில் உள்ள வயர்களில் இருந்து ‘டப்’ என்று சத்தத்துடன் தீப்பொறி விழுந்துள்ளது. இதை கவனித்த வெள்ளியங்கிரி, உடனடியாக காரை பாலத்தின் நடுவில் நிறுத்தி, காரில் இருந்து கீழே இறங்கி முன்புறம் உள்ள என்ஜின் பகுதியை திறக்க முயன்றுள்ளார். அதற்குள் என்ஜின் பகுதியில் இருந்து அதிகமாக புகை வெளியேறியது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த திருமூர்த்தி, சுரேஷ் ஆகியோர் காருக்குள் இருந்த கோவில் பிரசாதம் மற்றும் பைகளை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினார்கள். பின்னர் ‘குபீர்’ என்ற சத்தத்துடன் காரின் முன்புறத்தில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ பரவியது. உடனடியாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இது குறித்து உடனடியாக திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் கார் டயர்கள் ‘டமார், டமார்’ என்ற சத்தத்துடன் வெடித்தன. வாகன நெருக்கடி மிகுந்த வளம் பாலம் பகுதியில் கார் தீப்பற்றி எரிந்ததை பார்த்ததும் வாகன ஓட்டிகள் தூரமாக சென்று தங்களுடைய வாகனங்களை நிறுத்தினார்கள். தீயணைப்பு வீரர் கள் வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பாலத்தில் பற்றி எரிந்த காரால் காங்கேயம் ரோடு, ஸ்ரீசக்தி தியேட்டர் ரோடு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.
காரின் உள்ளே வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கார் தீப்பற்றி எரிவதற்குள் காருக்குள் இருந்த 3 பேரும் உடனடியாக வெளியே வந்ததால் அவர்கள் காயமின்றி உயிர்தப்பினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும்பரபரப்பு ஏற்பட்டது.