பாகனை, யானை மிதித்து கொன்றது கோவில் திருவிழா ஊர்வலத்தில் பயங்கரம்

அருமனை அருகே கோவில் திருவிழா ஊர்வலத்தில் பாகனை, யானை மிதித்து கொன்றது.

Update: 2018-03-24 23:15 GMT
அருமனை,

குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பனச்சமூடு வெள்ளச்சிப்பாறை என்ற இடத்தில் ஒரு கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் கேரள மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட அம்முக்குட்டி என்ற பெண் யானையும் பங்கேற்றது. இந்த யானையின் பாகனாக திருச்சூர் பகுதியை சேர்ந்த சமீர் (வயது 25) என்பவர் இருந்தார்.

ஊர்வலத்தின் முன்பாக யானை செல்ல பக்தர்கள் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். யானை மீது பூசாரி உள்பட 2 பேர் அமர்ந்திருந்தனர். பாகன் சமீர் யானையின் முன்பாக நடந்து அதை வழிநடத்தி சென்று கொண்டிருந்தார்.

ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது, யானை திடீரென மிரண்டு, பாகனை அருகில் இருந்த ஒரு சுவரில் முட்டி தள்ளியது. இதை சிறிதும் எதிர்பார்க்காத பாகன் அலறியடித்து கீழே விழுந்தார். உடனே யானை, அவரை காலால் மிதித்து கொன்றது.

இந்த பயங்கர சம்பவத்தை பார்த்ததும் ஊர்வலத்தில் வந்த பக்தர்கள் அலறியடித்து நாலாபுறமாக  ஓடினர். அப்போது யானையின் மேல் அமர்ந்திருந்த 2 பேரும் பயத்தில் செய்வதறியாது திகைத்தனர். இதற்கிடையே பாகனை கொன்ற யானை சிறிது நேரத்தில் அமைதியாக நின்றது. ஆனால், தனக்கு மேலே இருந்த 2 பேரையும் இறங்க விடவில்லை.

இதுகுறித்து யானையின் உரிமையாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உரிமையாளர் அங்கு விரைந்து வந்து, மேலே இருந்தவர்களை இறக்கி விடுமாறு யானைக்கு கட்டளையிட்டார். உடனே, அது அவரது கட்டளைக்கு கீழ்படிந்து அவர்களை மெதுவாக இறக்கி விட்டது.

தொடர்ந்து உரிமையாளருடன் வந்த மற்றொரு பாகன் யானையை வழிநடத்தி அழைத்து சென்றார்.

இந்த சம்பவம் குறித்து அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்த பாகனின் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில் திருவிழா ஊர்வலத்தில் பாகனை, யானை மிதித்து கொன்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்