மூலநூலுக்கே முடிசூட்டிய கம்பன்

இன்று (மார்ச் 24-ந்தேதி) கம்பர் திருநாள்.

Update: 2018-03-24 07:34 GMT
“கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்றும், “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல், இளங்கோவைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை” என்றும், பாரதியார் போற்றியதை நாடு நன்கறியும்.

தமிழுக்குக் கதியாக இருப்பவர்கள் இருவர் என்றும், ஒருவர் கம்பர் என்றும், மற்றொருவர் திருவள்ளுவர் என்றும் இரண்டு பெருமக்களின் முதல் எழுத்துகளைச் சேர்த்தால் “கதி” என்று கருதப்படும் என்றும் அறிஞர் செல்வக் கேசவராய முதலியார் எழுதியுள்ளார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய கம்பராமாயணம் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் பங்குனி மாதம் அத்த நட்சத்திரத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது எனத் தனிப்பாடல் மூலம் தெரிய வருகிறது.

ராமவதாரம் என்ற கம்பர் காப்பியம் பாலக் காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணியக் காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தரக் காண்டம், யுத்தக் காண்டம் என ஆறு காண்டங்களாக 10 ஆயிரத்து 368 பாடல்களைக் கொண்டது. ஒரு பாடலுக்கு நான்கு சீர்களில் இருந்து, எட்டுச் சீர்கள் வரையிலான 4 அடிகளைக் கொண்ட பாடல்களைக் கொண்டு கம்பர் கம்பராமாயணத்தை படைத்துள்ளார்.

சராசரியானதொரு மனிதன் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அறிந்திருக்கக் கூடிய சொற்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் வரை தான் இருக்கக் கூடும். வேண்டுமானால் ஐயாயிரம் சொற்கள் வரை ஒருவரால் அடையாளம் கண்டு கொள்ள முடியலாம்.

மிகப்பெரிய எழுத்தாளர்களைப் பொறுத்தவரை இந்த மதிப்பீடு ஒன்றரை மடங்கிலிருந்து இரண்டு மடங்கு வரை கூடுதலாக இருக்கலாம். கவிச்சக்கரவர்த்தி கம்பர் இந்த வரைமுறைகளையெல்லாம் விஞ்சி நிற்கிறார். ஏறத்தாழ 40 ஆயிரம் சொற்கள் கம்ப ராமாயணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாகப் புனையப்பட்ட சொற்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கு மேல் இருக்கும் என ஓர் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரம் பாடலுக்கு ஒருமுறை தன்னை ஆதரித்த திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடுகிறார்.

காரைக்குடியில் உள்ள நாட்டரசன் கோட்டையில் கம்பருக்கு மூன்று நாட்கள் இலக்கியத் திருவிழாவைக் காரைக்குடி கம்பன் கழகத்தின் செயலாளர் கம்பன் அடிப்பொடி கணேசன் தலைமையில் 24-3-1940 அன்று முதன் முதலாகத் தமிழ்நாட்டிலேயே கம்பருக்கு ஒரு பெருவிழா எடுக்கப்பட்டது.

அதனை மனத்தில் கொண்டு தமிழக அரசு மார்ச் 24-ந்தேதியையே கம்பர் திருநாளாகப் போற்றும் வகையில், நேர் கொண்ட பார்வையோடு நிமிர்ந்து நிற்கும் தோற்றத்தோடும் உள்ள கம்பர் சிலைக்கு மார்ச் 24-ந்தேதி மாலை அணிவிக்கப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் தமிழக அரசு கம்பர் விருதைத் தமிழறிஞர் ஒருவருக்கு வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டிற்கும், மொழிக்கும், இனத்துக்கும் கீர்த்தி மிக்க செயலை நினைவுபடுத்தவும் கம்பர் புகழ் யாண்டும் என்றென்றும் நீடூழி வாழவும் அவரின் அரிய பாடல்களைப் போற்றிப் பாடிப் பின்பற்றவும், கம்பர் திறமை பேசி, காவியத் தமிழ் வளர்ப்போம் என்று தமிழ் மக்கள் உறுதி கொள்வதற்கு, இந்தநாள் ஊக்கமான திருநாளாக அமைய வேண்டும்.

கம்பரின் பெருமையைப் புகழ்ந்து கூறும்படியாகத் தமிழ்நாட்டில் முதுமொழிகள் வழங்கிப் பல வருகின்றன. “கல்வியில் பெரியர் கம்பர்”, “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்”, கவிச்சக்கரவர்த்தி, கடவுள் மாக் கவிஞர் என்பதோடு கம்பர் பாடலைக் கம்பச்சித்திரம் என்றும், கம்பநாடகம் என்றும் புலவர்கள் எந்நாளும் போற்றியுள்ளார்கள்.

வால்மீகி எழுதிய ஆதிகாவியத்தைப் பின்பற்றிக் கம்பர் தம் காப்பியத்தைப் படைத்தபோதிலும் கம்பராமாயணம் மொழிபெயர்ப்பும் அல்ல, தழுவலும் அல்ல, சார்பு நூலும் அல்ல. ஒரு புதுக் காப்பியத்தைப் போன்றே அமைத்திருக்கிறார். தம் கற்பனை திறனால் மூலநூலுக்கே முடி சூட்டியபடி கம்பர் காப்பியம், கதையால் தழுவலானாலும், மொழியாலும் நடையாலும் பண்பாலும் உணர்ச்சியாலும் பரிவாலும் உருக்கத்தாலும் தமிழ் மண்ணில் பிறந்த தமிழ்க்காப்பியமாகக் கம்பர் உருவாக்கினார்.

இந்தக் காப்பியத்தை மொழி பிறப்புக் காப்பியமாகவே அமைத்த திறமை கம்பரைப்போல் பிறரிடம் காண முடியுமா என்று மூதறிஞர் வ.சு.ப.மாணிக்கனார் குறிப்பிட்டுள்ளார்.

வால்மீகி ராமாயணத்தில் உள்ள பலவற்றைக் கம்பர் தம் காப்பியத்தில் அவ்வாறே தந்துள்ளார். சிலவற்றைக் கம்பர் விரிவாக்கி எழுதினார். வால்மீகி சொல்லாத சிலவற்றைக் கம்பர் தானே படைத்து மணம் கமழச் செய்தார். பழையன, புதியன என்று எல்லாவற்றையும் கம்பர் கை பட்ட பிறகு ஒளிர்கின்றன என்று டாக்டர்.மு.வ.வும் புகழ்ந்துள்ளார்.

வால்மீகி வரைந்த ஆதிகாவியம், வடநாட்டிலேயே பிறந்து அங்கேயே முடிந்த காப்பியமாகும். கம்பரோ, தமிழ்நாட்டில் தமிழ்மண்ணில் பிறந்த தமிழ் உணர்வாகவே எல்லாவற்றையும் பார்க்கின்றார். கம்பர் காட்டுகிற வயல் வளம் காவிரி நாடல்ல கழனி நாடாகவும், கோதாவரி ஆறுகூடச் சங்கப்பாடலாகவும், ராமன் ஏந்திய வில்லில் விடுகின்ற அம்புகூடத் தமிழ்ச் சொற்களாகவும், தமிழ் வழக்கன்ன தனிச் சிலையாகவும் வண்டு தமிழ் பாட்டிசைக்கும் தாமரையே என்று வண்டு முரல்வதுகூடத் தமிழாகவே உருகிப்பாடியுள்ளர்.

சீதை திருமணத்தைக் காதல் திருமணமாகவே கண்ணில் பேசிக்கொண்ட அகத்திணை அன்பாகவே கலைத் திருமணமாகப் பழந்தமிழர் இலக்கியப் பண்புக்கு ஏற்ப அமைத்துக் காட்டினார். மிதிலை நகரத்தில் வீதி வழியாக விசுவாமித்திர முனிவர், லக்குவனோடு நடந்துவரும் ராமன், அழகின் பிழம்பாக மேல்மாடத்தில் நின்று கொண்டிருக்கும் சீதையைக் காண்பதாகவும், அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள், இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினான் என்று பாடியிருக்கிறார்.

கம்பருடைய காட்சிகளெல்லாம் தமிழின் பெருமையைப் பாடுவதாகவே அமைந்தன. அகத்தியன்தான் தமிழின் தந்தை என்று சிலர் கூறியபோது, அதை நயமாக மறுப்பதுபோல “என்றும் உளதென் தமிழ் இயம்பி இசை கொண்டான்” என்று கூறி, அளப்பரிய பெருமை கொண்ட தமிழைப்பேசியதால் தான், அகத்தியனுக்கே பெருமை வந்தது என்று கம்பர் பாடினார்.

இவ்வாறு, சொல்தோறும், தொடர்தோறும் சுரங்கம் போலச் சீர்தோறும், அடிதோறும் அழகு சிந்தப்பாடுவது கம்பரின் மாட்சியாகும். கம்பர் புகழ் பாடுகின்ற கம்பர் கழகங்கள் சென்னை (ஏ.வி.எம். ராஜேஸ்வரி மண்டபம்), அம்பத்தூர், புதுக்கோட்டை, காரைக்குடி, வேலூர், நெல்லை, திருச்சி, மதுரை, ராஜபாளையம், விழுப்புரம், சேலம், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் புதுவையிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

மேலும், கடல் கடந்த நாடுகளான இலங்கை, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகியவற்றிலும் கம்பர் விழாக்கள் மூலம் கம்பர் புகழ் மணம் என்றும் நிலவும் வகையில் சிறப்பாக நடைபெறுகின்றன. வாழ்க தமிழ்! ஓங்குக கம்பர் புகழ்! 

அவ்வை அருள், 
இயக்குனர்,
தமிழக அரசின் மொழிபெயர்ப்புத்துறை

மேலும் செய்திகள்